News Just In

9/17/2026 01:08:00 PM

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மும்முனைப் பாராட்டு விழாவும் மீலாத் விழாவும்

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மும்முனைப் பாராட்டு விழாவும் மீலாத் விழாவும்



நூருல் ஹுதா உமர்

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் கல்விச் சாதனைகளைக் கௌரவிக்கும் மும்முனைப் பாராட்டு விழாவும், மீலாதுன் நபி விழாவும் இன்று (16.09.2026) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். ரிசாத் அவர்களின் தலைமையிலும், பாடசாலையின் கலாசாரக் குழுத் தலைவர் ஆசிரியர் அஷ்ஷேஹ் எம்.ஜே. நௌபாஸ் அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிப்பதுடன், பாடசாலையின் வரலாற்றுப் பங்களிப்புகளையும் நினைவுகூரும் வகையில் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களும், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்களும் இந்நிகழ்வில் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டுவது அவர்களுக்கான ஒரு கௌரவமாக மட்டுமன்றி, ஏனைய மாணவர்களுக்கும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான உந்துதலை ஏற்படுத்தும் செயற்பாடாகவும் அமைந்தது. சாதனை மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் பங்களிப்புகளும் இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.

அதேவேளை, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் பாடசாலையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டும் கௌரவிப்பும் நிகழ்வில் இடம்பெற்றது.

இதனுடன் இணைந்ததாக கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக மீலாதுன் நபி விழாவும் சிறப்பாக நடைபெற்றது. விசேட மார்க்கச் சொற்பொழிவாளராக பாத்திமத்துஷ் ஷஹ்றா கல்லூரியின் அதிபரும், தாருல் ஷபா நிறுவனத்தின் பணிப்பாளருமான ஸபா முஹம்மட் (நஜாயி) கலந்து கொண்டு இஸ்லாமிய சமயப் போதனைகள், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதல்கள், நல்லொழுக்கம், சகோதரத்துவம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு உள்ளிட்ட விடயங்களை மாணவர்களிடையே வளர்க்கும் நோக்கில் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார். மேலும், பல்வேறு இஸ்லாமிய கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம் கலந்து சிறப்பித்தார். விசேட அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் இஸ்லாம் பாடத்திற்குப் பொறுப்பான வளவாளர் அஷ்ஷேஹ் யூ.எல். றிபாயுத்தீன் (காஷிபி) கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இதுவரை சேவையாற்றிய அதிபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம் அவர்களினால் திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் வளர்ச்சிப் பயணத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்று பணியாற்றிய அதிபர்களின் சேவையைப் பதிவு செய்து, அவர்களை எதிர்கால சந்ததியினரின் நினைவில் நிலைத்திருக்கச் செய்யும் முயற்சியாக இந்நிகழ்வு அமைந்தது.

இதனுடன், பாடசாலையின் வரலாற்றுச் சுவடுகளைப் பிரதிபலிக்கும் நினைவுச் சுவடுகள் தாங்கிய நினைவுப் பதாகையும் திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் கடந்தகாலப் பயணத்தையும், தற்போதைய கல்வி முன்னேற்றத்தையும் எதிர்கால இலக்குகளையும் இணைக்கும் அடையாளமாக இந்நினைவுப் பதாகை அமையும் என பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர்.

நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்

No comments: