மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 26ஆவது ஆண்டு தலைவர் தின நினைவேந்தல் நிகழ்வு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் புதன்கிழமை (16) இரவு கல்முனை மயோன் மாவத்தையில் அமைந்துள்ள மயோன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் வருடாந்தம் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்நினைவேந்தல் நிகழ்வு, இம்முறை 26ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவரும் தலைமைப்பேராசிரியருமான றமீஸ் அப்துல்லாஹ், பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அரசியல் பயணம், சமூகப் பணிகள், சிந்தனைகள், சமூகத்துக்கான திட்டமிடல்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் சிறப்பு நினைவுரையை நிகழ்த்தினார்.
இதன்போது உரையாற்றிய பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர், மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் சமூகப் பணிகள், அரசியல் சிந்தனைகள், சமூக அபிவிருத்தி தொடர்பான திட்டமிடல்கள் மற்றும் கொள்கைகள் குறித்து கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன், சமகால அரசியல் சூழலில் முஸ்லிம் சமூகத்தின் நிலை மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும் அதிபர் அன்வர் நௌசாத், விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர்ரஹ்மான் போன்றோர்களும் கருத்துரை வழங்கினர். துஆ பிரார்த்தனையை மௌலவி ஏ.எம். நியாஸ் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ. நளீர், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. பஷீர், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் உள்ளிட்ட அரசியல், சமூக, வர்த்தக மற்றும் கல்வித்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், தலைவர் அஷ்ரப்பின் அரசியல் பயணத்துடனும் சமூகப் பணிகளுடனும் நெருக்கமாகப் பயணித்தவர்கள், அவரது அபிமானிகள், அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். இதனால் மயோன் வரவேற்பு மண்டபம் பொதுமக்களால் நிறைந்திருந்தது.
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது நினைவாக ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 26 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அவரது அரசியல் சிந்தனைகள், சமூகப் பணிகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் தொடர்பான அவரது பங்களிப்புகள் பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்தும் நினைவுகூரப்பட்டு வருகின்றன.
இந்நினைவேந்தல் நிகழ்வு, அஷ்ரப் அவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகளை மீட்டுப்பார்ப்பதற்கும், அவரது காலப்பகுதியில் முன்வைக்கப்பட்ட சமூகக் கொள்கைகள் மற்றும் சிந்தனைகளை சமகாலச் சூழலுடன் தொடர்புபடுத்தி ஆராய்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாகவும் அமைந்தது.
No comments: