எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்கில்லை
சட்டத்தின் பிரகாரமே கைதுகள் இடம்பெறுகின்றன
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு தண்டனையுண்டு. மன்னிப்பில்லைதேசிய மக்கள் சக்தியின் தலைவராக அரசியல் செய்வேன்
வடக்கில் மீள்குடியேற்றம் இரண்டாண்டுக்குள் முழுமைப்படுத்தப்படும்.
ஊழல்வாதிகளுக்கும், பாதாளக்குழுக்களுக்கும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ள போது அவர்களின் நண்பர்களான எதிர்க்கட்சியினர் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள். சட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதால் நாட்டு மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. இவர்களுக்கு தான் பிரச்சினை. எதிர்க்கட்சிகளின் கூட்டணி எனக்கு சவாலல்ல, ஏனெனில் மக்கள் என்னுடன் உள்ளார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது, ஏனெனில் எவருடனும் எனக்கு தனிப்பட்ட பகைமை இல்லை.கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட பல வழக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக முறையாக விசாரிக்கப்பட்டது. தற்போது கைது செய்யப்படுகிறது. மகன் இலஞ்சம் பெறும் போது 'மகனே அது தவறு' என்று தந்தை அன்று தண்டித்திருந்தால் இன்று அழ வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.இது அனைவருக்கும் ஒரு படிப்பினை எனவும் தெரிவித்தார்.
பொலன்னறுவை நகரில் சனிக்கிழமை (12) நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
2024 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் சாதாரணதொன்றல்ல, குடும்ப ஆட்சி முறைமையை தோற்கடித்து மக்கள் தமக்கான அரசாங்கத்தையே 2024 ஆம் ஆண்டு தெரிவு செய்தார்கள். ஆகவே ஒட்டுமொத்த மக்களும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகவுள்ளார்கள்.
2022 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கான போராட்டத்தை விவசாயிகள் தான் ஆரம்பித்தார்கள். சேதன பசளைத் திட்டத்தை கொண்டு வந்தார்கள். இரவோடு இரவாக அமுல்படுத்தினார்கள். அதனால் விவசாயத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டது.அதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது. அந்த பாதிப்பில் இருந்து தான் தற்போது மீண்டு வருகிறோம்.
பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்த நாட்டையே பொறுப்பேற்றோம். பொருளாதார மீட்சிக்கான பணிகளை முன்னெடுத்துக் கொண்டு, வெளிநாட்டு அரசமுறை கடன்களை திருப்பிச் செலுத்திக் கொண்டு தான் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாமல் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. அதனால் தான் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.தற்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது.
பூகோள மட்டத்தில் நெருக்கடிகள் ஏற்படும் போது எதிர்க்கட்சியினர் அதனை தமது அரசியல் இலாபத்துக்காகவே பயன்படுத்திக் கொண்டார்கள். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், உணவு தட்டுப்பாடு ஏற்படும், மின்விநியோகம் துண்டிக்கப்படும் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதால் அவர்களின் எதிர்பார்ப்பு வெற்றிப்பெறவில்லை.
விவசாயிகளுக்கு பல பிரச்சினைகள் காணப்படுகிறது என்பதை அறிவேன். அவற்றுக்கு கட்டம் கட்டமாக தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். நெல்லுக்கான உத்தரவாத விலை வழங்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களால் தான் இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஆகவே மக்களுக்கு முழுமையான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்பேன்.
குடும்ப நலனுக்காக கடந்த காலங்களில் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் கூட்டாக அரச நிதியை கொள்ளையடித்தார்கள். இன்று அவர்கள் வழக்கு விசாரணைக்காக வரிசையில் நிற்கிறார்கள். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
வீடில்லாதவர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வீடமைப்புக்காக நிதி ஒதுக்கப்படும். யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றும் 13500 குடும்பங்கள் மீள்குடியமர்த்தாமல் முகாம்களில் தான் வாழ்கிறார்கள்.
2027 ஆம் ஆண்டு 6500 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படும், 2028 ஆம் ஆண்டு 6500 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படும். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல மாகாணங்களில் நிலவும் வீடமைப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்.
ஊழலுக்கு எதிராகவும், பாதாளக் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இன்று அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். இதுதான் இவர்களின் உண்மையான முகம் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
No comments: