News Just In

9/12/2026 06:06:00 AM

ஆதம் வீதிக்கு முதற்கட்ட கொங்கிரீட் பணிகள் நிறைவு : மாவடிப்பள்ளி ஆதம் வீதியின் நீண்டகால தேவைக்கு தீர்வு

ஆதம் வீதிக்கு முதற்கட்ட கொங்கிரீட் பணிகள் நிறைவு : மாவடிப்பள்ளி ஆதம் வீதியின் நீண்டகால தேவைக்கு தீர்வு


மாளிகைக்காடு செய்தியாளர்

மாவடிப்பள்ளி ஆதம் வீதியின் நீண்டகால தேவையை கருத்திற்கொண்டு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் PSDG – 2026 வேலைத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 13 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் குறித்த வீதிக்கு கொங்கிரீட் இடும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மாவடிப்பள்ளி மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவையை கருத்திற்கொண்டு இவ்வீதியை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை முன்மொழிந்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.ஹில்மி அவர்களால் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து, குறித்த வீதி அபிவிருத்தித் திட்டம் PSDG – 2026 வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு, முதற்கட்ட கொங்கிரீட் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இத்திட்டத்தை முன்மொழிந்து, மக்களின் நீண்டகால தேவையை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.ஹில்மி அவர்களுக்கு மாவடிப்பள்ளி மக்கள் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பையும் வழங்கிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் அவர்களுக்கும் மாவடிப்பள்ளி மக்கள் சார்பில் உளமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

மாவடிப்பள்ளி மக்களின் நீண்டகால அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகளில் ஒன்றாகக் காணப்பட்ட இவ்வீதியின் அபிவிருத்தி, அப்பகுதி மக்களின் அன்றாட போக்குவரத்துக்கு பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: