தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா எதிர்வரும் டிசம்பர் 01ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பொக்காரவில் நடைபெறவுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவுகள், நேபாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகள் பங்கேற்கவுள்ள போட்டிகளில் இலங்கையிலிருந்து 605 வீர வீராங்கணைகளும், 200 பேர் கொண்ட தொழில்நுட்ப அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கையின் ஆயத்தம் குறித்து விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல கருத்து தெரிவிக்கையில், 'இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் நாங்கள் 25 தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டோம். ஆனால் இம்முறை 35 தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்தமாக 125 பதக்கங்களை வெல்வதே எமது இலக்காகும்.
இதன்படி தங்கப் பதக்கம் வெல்கின்ற வீரருக்கு வழங்குகின்ற பணப்பரிசை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல வெண்கலப் பதக்கத்துக்கான பணப் பரிசை குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளோம். ஏனெனில் அனைத்து வீரர்களும் தங்கப் பதக்கத்தினை வெல்வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதே எமது இலக்காகும்' என தெரிவித்தார்.
மேலும் நேபாளத்தில் உள்ள காலநிலைக்கு பழக்கப்படுத்திக் கொள்ளும் நோக்கில் மெய்வல்லுனர் நீச்சல் மற்றும் குத்துச்சண்டை ஆகிய போட்டிகளில் பங்குபற்றுகின்ற வீரர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி நேபாளத்துக்கு அனுப்பி வைப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்படி இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் 27 போட்டி நிகழ்ச்சிகளுக்காக சுமார் 605 வீர வீராங்கனைகள் இலங்கையிலிருந்து பங்கேற்கவுள்ளனர். அத்துடன் 95 பயிற்சியாளர்கள் 13 உடற்கூற்று நிபுணர்கள், 15 மசாஜ் நிபுணர்கள், 10 வைத்தியர்கள், 25 முகாமையாளர்கள், 15 மேற்பார்வையாளர்கள் மற்றும் 5 விசேட ஆலோசகர்கள் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அணியுடன் பயணிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை வீரர்களின் முதல்கட்ட பயிற்சிகளுக்காக 23 மில்லியன் ரூபா பணத்தை விளையாட்டுத்துறை அமைச்சு ஒதுக்கியிருந்தது. இந்தப் பயிற்சிக் குழாத்தில் சுமார் 1076 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இதனிடையே தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இறுதிக் குழாம் இன்னும் ஒருசில வாரங்களில் அறிவிக்கப்படும்.
இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தி மற்றும் சில்லோங்கில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 484 வீர வீராங்கனைகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: