ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும், அங்கே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களைக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முற்றாக மறுத்துள்ளார்.
இதுபோன்ற விஷமத்தனமான வதந்திகள் குறித்துத் தாம் கவலைப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சமகால அரசியல் கள நிலவரங்கள், கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள், மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 26ஆவது நினைவு தின நிகழ்வுகள் மற்றும் பேராளர் மாநாடு ஆகியவை குறித்தே ஆராயப்பட்டதாகவும், தேசிய பட்டியல் உறுப்பினர் பற்றி அங்கு பேசப்படவில்லை எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தும் சுயநல நோக்கோடு சிலரால் பரப்பப்படும் இத்தகைய புரளிகளை எவரும் நம்பவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள ரவூப் ஹக்கீம், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பிலான சரியான முடிவு உரிய நேரத்தில் எடுக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
No comments: