News Just In

8/31/2026 03:40:00 PM

மட்டக்களப்பில் றோட்டரக்ற் “உங்களுக்கான மேடை” டென்னிஸ் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கு 140 சான்றிதழ்களும் 106 கிண்ணங்களும் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் றோட்டரக்ற் “உங்களுக்கான மேடை” டென்னிஸ் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கு 140 சான்றிதழ்களும் 106 கிண்ணங்களும் வழங்கி வைப்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பில் றோட்டரக்ற் கழகம், மட்டக்களப்பு டென்னிஸ் பயிற்சி கழகத்துடன் இணைந்து, முதன் முறையாக திறமை, போட்டி, விளையாட்டு மனப்பான்மை மற்றும் “நீடித்த தாக்கத்தை உருவாக்கு” என்ற உணர்வைக் கொண்டாடும் உங்களுக்கான மேடை ஐந்து நாள், பல பிரிவு டென்னிஸ் போட்டியை நடத்தி, அதில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி துவங்கிய 5 நாள் போட்டிகள் 30ஆம் திகதி மாலை சான்றிதழ்கள் கிண்ணங்கள் வழங்கி வைத்ததுடன் நிறைவு பெற்றது.

மட்டக்களப்பு லேக் வியூ அரங்கில் சிவப்புப் பந்து, பச்சைப் பந்து, ஓரேஞ் பந்து, பொதுப் பந்து என இந்த டென்னிஸ் போட்டிகள் ஐந்து பிரிவுகளாக இடம்பெற்று நிறைவு பெற்றன.

ஒற்றையர் இரட்டையர்களாக 8 வயதிலிருந்து வயது வந்தோர் வரை, மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி, வின்சன்ற் மகளிர் தேசியக் கல்லூரி, மத்திய கல்லூரி, ஈஸ்டர்ன் சர்வதேசப் பாடசாலை, அரப்போ கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 140 மாணவர்கள் இப்போட்டிகளில் பங்குபற்றி தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

றோட்டரக்ற் கழகத்தின் தலைவி ஐஸ்வர்யா ருத்ரா தலைமையில் இடம்பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர்களைப் பாராட்டி சான்றிதழ்களும் கிண்ணங்களும் வழங்கி வைக்கும் இறுதி நிகழ்வில் றோட்டரக்ற் கழக நிருவாகிகள், மட்டக்களப்பு டென்னிஸ் பயிற்சி கழக டென்னிஸ் பயிற்றுவிப்பாளர்கள், அதன் தலைவர் என். ஜனன், உட்பட மட்டக்களப்பு மாநகர முன்னாள் ஆணையாளர் எஸ். நவநீதன், டென்னிஸ் மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

அங்கு டென்னிஸ் போட்டியாளர்கள், அதிதிகள், பெற்றோர் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த றோட்டரக்ற் கழகத்தின் தலைவி ஐஸ்வர்யா “எங்களுடைய கழகம் கடந்த 2025 ஜனவரி 17 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இது இளைஞர் யுவதிகளால் நடத்தப்படும் ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பாகும்.

இந்த அமைப்பின் மூலம் நாங்கள் சமூகத்தில் நல்ல அபிவிருத்தி மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று திடமாக நம்புகிறோம்.

இதுவரையில் நாங்கள் பல சமூக சேவைகளைச் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளோம். அந்த உத்வேகத்தில், இன்னும் பல சாதக மாற்றங்களைக் கொண்டு வரமுடியும் என்று நம்புகின்றோம்.

அந்த நம்பிக்கையோடுதான் எங்களுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

சமூக சேவைகள் செய்வதில் நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டோம். அதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால சமூக சேவைகளை சிறப்பாகநச் செய்ய திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

No comments: