News Just In

7/13/2026 10:14:00 AM

ஸஹம் டிராவல்ஸ் சாம்பியன்ஸ் கிண்ண கால்பந்து போட்டியின் சம்பியனாக ஏறாவூர் YSSC !

ஸஹம் டிராவல்ஸ் சாம்பியன்ஸ் கிண்ண கால்பந்து போட்டியின் சம்பியனாக ஏறாவூர் YSSC !


நூருல் ஹுதா உமர்

கல்முனை சனி மௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் 46 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டிலும், ஸஹம் ட்ராவல்ஸ் நிறுவனத்தின் அனுசரணையிலும் நடைபெற்ற ஸஹம் ட்ராவல்ஸ் சம்பியன்ஸ் கிண்ணம் (SAHAM Travels Champions Cup) – 2025 கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில், ஏறாவூர் YSSC அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சம்பியன் பட்டத்தை வென்றது.

கல்முனை சாந்தங்கேணி ஐக்கிய பொதுவிளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (10) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஏறாவூர் YSSC அணி, முனைக்காடு ராமகிருஷ்ண விளையாட்டுக்கழகத்தை 7–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.

ஏறாவூர் YSSC அணிக்காக உசைத் மற்றும் முன்ஸிப் ஆகியோர் தலா இரண்டு கோல்களையும், முஸ்தாக், அதீர் மற்றும் முஹைமீன் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஏறாவூர் YSSC அணி, ரூபா 2 இலட்சம் பணப்பரிசும் சம்பியன்ஸ் கிண்ணத்தையும் சுவீகரித்தது. இறுதிப் போட்டியின் பிரதம அதிதிகளாக விளையாட்டுத்துறை முன்னாள் பிரதி அமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் SAHAM Travels நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சி. பைசால் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு கிண்ணம், மற்றும் பணப்பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவரும் 46 ஆண்டுகால விளையாட்டுப் பாரம்பரியத்தை கொண்ட கல்முனை சனி மௌன்ட் விளையாட்டுக் கழக செயலாளருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப் தலைமையில் நடத்திய இத்தொடர், அம்பாறை மாவட்டத்தின் முன்னணி கால்பந்தாட்ட அணிகளின் பங்கேற்புடன் விறுவிறுப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இறுதிநாள் நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் பொதுச் செயலாளர் வை.கே ரஹ்மான், கல்முனை சனி மௌன்ட் விளையாட்டுக் கழக தலைவர் ஏ.எல்.ஏ.காதர், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.எம். நவாஸ், பொலிஸ் அதிகாரிகள், அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் மற்றும் கல்முனை சனி மௌன்ட் விளையாட்டுக் கழக நிர்வாக சபையினர், பிராந்திய விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள் விளையாட்டு ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments: