தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (ASEAN) உறுப்பு நாடுகளான வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, மியான்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தூதரகத் தலைவர்களும் தூதரக அதிகாரிகளையும் உள்ளடக்கிய உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
இது கொழும்பிலுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் தூதரகத்தின் ஏற்பாட்டில், இடம்பெற்றது.
இவ்விஜயத்தின் போது, மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் தூதரகப் பிரதிநிதிகள் குழுவினருக்கு மாநகர சபை வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார், ஆணையாளர் நாகராஜா தனஞ்ஜெயன், மாநகர சபையின் உறுப்பினர்கள், அலுவலர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஏசியான் பிரதிநிதிகளை வரவேற்றனர்.
தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை வளங்கள், இயற்கை, கலாசார மரபுகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், கடற்கரைச் சுற்றுலா, சுற்றுச்சூழல் வளங்கள், உள்ளுர் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள், முதலீட்டுத் திறன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஒளி-ஒலி விளக்கக்காட்சி மூலம் விரிவான விளக்கமளிக்கப்பட்டது
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், ஏசியான் நாடுகளின் தூதரகத் தலைவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக, பொருளாதார, சுற்றுலாத்துறை முன்னேற்றங்கள் குறித்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி வாய்ப்புகள், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்கள், சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வழிமுறைகள், முதலீட்டு வாய்ப்புகள் பற்றி எதிர்காலத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்தனர்.
கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவமான சுற்றுலா வளங்கள், பன்முக கலாசாரப் பாரம்பரியம், அமைதியான சூழல், முதலீட்டிற்கான ஏற்ற வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்ததுடன், ஏசியான் நாடுகளுடனான நட்புறவுகளும் ஒத்துழைப்புகளும் எதிர்காலத்தில் மேலும் வலுப்பெற வேண்டுமெனவும் தெரிவித்தார்.
No comments: