News Just In

7/10/2026 06:35:00 AM

தவறான பதிலுக்கு தண்டனையா? மாணவியை அறைந்த ஆசிரியர் மீது பொலிஸில் முறைப்பாடு!

தவறான பதிலுக்கு தண்டனையா? மாணவியை அறைந்த ஆசிரியர் மீது பொலிஸில் முறைப்பாடு



மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிடைத்த தகவல்களின்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட விசேட வகுப்பின் போது, ஆசிரியர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு மாணவி தவறான பதில் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் வகுப்பாசிரியர், சக மாணவர்கள் முன்னிலையிலேயே மாணவியின் கன்னத்தில் பலமுறை அறைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலால் மாணவியின் கன்னத்தில் காயங்களும் இரத்தக் கட்டிகளும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் மாணவியை அவரது பெற்றோர் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிருப்தி மற்றும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மாணவியைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியைக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments: