News Just In

7/18/2026 01:29:00 PM

மட்டக்களப்பில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கான முன்னெடுப்பு

மட்டக்களப்பில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கான முன்னெடுப்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்வின்றித் தொடரும் காணி தொடர்பான இழுபறிகளுக்கு தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

இதனடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரு நாள் நடமாடும் சேவை மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சியின் பங்கேற்புடன் வெள்ளியன்று 17.07.2026 மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பேரில் இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறீநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி சிறீPநாத், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட காணி பிரதி ஆணையாளர், மாகாண காணி ஆணையாளர், மாவட்ட உதவிச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச உதவிச் செயலாளர்கள், காணி நிர்வாகத்துடன் தொடர்புடைய திணைக்களங்களின் உயரதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு, சக மனிதனுக்கோ அல்லது சமூகத்துக்கோ அநீதி இழைக்கப்படாத வகையில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நீண்டகாலமாக நிலவி வரும் காணித் தகராறுகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காலத்தில் மாத்திரமே சாத்தியப்படும். மக்களின் இந்த நம்பிக்கை ஒரு போதும் வீண் போகாது என்றார்.

மேலும், குறிப்பாக, 2004இல் ஏற்பட்ட சுனாமி இடரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்பு நடவடிக்கைக்காக அப்பகுதியில் வாழும் மக்களின் காணிகளை சுவீகரித்து கொண்டபோது அதற்கு பகரமாக இதுவரை எவ்வித காணி உரித்துக்கள் வழங்கப்படாமல் உள்ளமை, நீண்ட கால குத்தகைக்கு காணிகளைப் பெற்றுக் கொண்டோருக்கு இதுவரை அது தொடர்பான முறையான ஆவண பத்திரங்கள் எதுவும் வழங்கப்படாமல் உள்ளமை, காரமுனை - கிரான் பிரதேச செயலக எல்லைப் பகுதிகளில் நிலவும் காணி நிர்வாகப் பிணக்குகள், மட்டக்களப்பு மாவட்ட, பிரதேச ரீதியான எல்லை முரண்பாடுகள், அத்துடன் எவ்வித நகர்வும் இன்றி இழுபறி நிலைக்குள் சிக்குண்டு கிடக்கும் மாதவனை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் வேண்டி நிற்கும் மேய்ச்சல் தரை விவகாரம் என்பவற்றுடன் இவ்வாறான தொடர் இழுபறி நிலைகளால் ஏற்படும் சமூக முரண்பாடுகள், விளைவுகள் தொடர்பிலும் பிரபுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.

சிறப்பு முன்னெடுப்பாக கடந்த காலங்களில் அழுலில் இருந்த 99 வருட குத்தகை எனும் நீண்டகால பாவனை என்ற விடயம் இனி 30 வருடங்களாக வரையறை செய்யப்பட்ட அதேவேளை, இவ்விடயங்களை தீர்க்கும் பொருட்டு உயரதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், சமூக மட்டப் பிரதிநிதிகள் அடங்கலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

No comments: