(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில், இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் சேர்க்கையை முன்னிட்டு விழிப்புணர்வுப் பிரச்சாரம் இடம்பெற்று வருகிறது.
நவீன உலகின் தொழில்வாய்ப்பு தேவைகளுக்கு ஏற்ப திறன்களைப் பெற்றுக்கொள்வதற்கும், புதிய தொழில் முனைவோர்களாக இளைஞர்களை உருவாக்குவதற்கும் இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக வழங்கி வரும் கல்வி, பயிற்சி வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், உயர் தொழில்நுட்பக் கருவிகள், நவீன இயந்திரங்களின் உதவியுடன் இளைஞர், யுவதிகளுக்கு தரமான தொழில்நுட்பக் கல்வியையும் செயன்முறைப் பயிற்சிகளையும் பெறுவதற்கான அனைத்து வசதிகளும் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கையின் நீலப் பொருளாதாரத்தின் (டீடரந நுஉழழெஅல) வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் திறன்மிக்க மனித வளத்தை உருவாக்கும் பணியிலும் பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.
நாடளாவிய ரீதியில் இயங்கிவரும் 08 பிராந்திய நிலையங்களின் ஊடாக இளைஞர், யுவதிகளின் தொழில்திறனை மேம்படுத்துவதுடன், நவீன அறிவியலையும், தொழில்நுட்ப அறிவையும் வழங்கி வருகிறது.
மேலும், தேசிய தொழிற் தகைமைச் சான்றிதழ் என்.வி.கியூ மட்டம் 4 சான்றிதழ் கற்கைநெறிகளும், டிப்ளோமா கற்கைநெறிகளும் பயிற்றுவிக்கப்பட்டு வருவதுடன் சர்வதேச தரத்திற்கு இணையான தொழில்தகைமையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு கற்கைநெறிகளும் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தினால் கற்பிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவை சம்பந்தமான நடைபவனி விழிப்புணர்வு, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே. அருள்சிவம் தலைமையில், கல்லடிப் பாலத்திலிருந்து மட்டக்களப்பு பேருந்து நிலையம் வரையிலான பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டன.
No comments: