தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் E/24 மாணவர் குழுவினருக்கான கல்வி நிகழ்ச்சித் தொடக்க விழா 2026.06.01 ஆம் திகதி பொறியியல் பீடத்தின் சிவில் பொறியியல் கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்வில் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், பதிவாளர் எம்.ஐ. நௌபர், நூலகர் எம்.எம். றிபாவுத்தீன், பேராசிரியர்கள், திணைக்களத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மின் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.ஐ.எஸ். ஜுஹானியா வரவேற்புரையாற்றியதுடன், இயந்திரப் பொறியியல் துறை விரிவுரையாளர் பொறியியலாளர் எச்.பி.ஏ. ஜயமினி கல்விசார் பணியாளர்கள் சார்பில் உரையாற்றினார். இறுதியாண்டு மாணவர் டபிள்யூ.எஸ். உடவத்த புதிய மாணவர்களை வரவேற்றதுடன், சிவில் பொறியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் எம்.ஐ. இல்ஹாம் ஜெஸீல் சிரேஷ்ட கல்விசார் பணியாளர்கள் சார்பில் உரையாற்றினார்.
பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம், புதிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, கல்விசார் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார். E/24 மாணவர்கள் பொறியியல் பீடத்தில் இணையும் 14ஆவது மாணவர் குழுவாக இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் புதிய மாணவர்களை வரவேற்று உரையாற்றுகையில், பல்கலைக்கழக வாழ்க்கை தனிநபர் மாற்றம் மற்றும் தலைமைத்துவ வளர்ச்சிக்கான முக்கிய கட்டமாகும் எனத் தெரிவித்தார்.
“பகிடிவதை ஒரு பாரம்பரியம் அல்ல; அது ஒரு நோய். அது மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சமூகப் புற்றுநோய்” எனக் குறிப்பிட்ட அவர், பகிடிவதை மற்றும் இணைய வழி பகிடிவதைக்கு எதிராக பல்கலைக்கழகம் “Zero Tolerance Policy” கொள்கையை கடைப்பிடிப்பதாக தெரிவித்தார்.
பரீட்சை முறைகேடுகள் தொடர்பிலும் கடுமையான எச்சரிக்கையை விடுத்த அவர், கல்விப் பயணத்தில் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் சொந்த முயற்சியே வெற்றிக்கான அடிப்படை என வலியுறுத்தினார். மேலும், எதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்திக்கும் உலகளாவிய சவால்களுக்கும் தீர்வு காணும் பொறியியலாளர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சிரேஷ்ட கல்விசார் பணியாளர்கள் சார்பில் உரையாற்றிய பொறியியலாளர் எம்.ஐ. இல்ஹாம் ஜெஸீல், 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் பீடம் இன்று நவீன ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் நாட்டின் முன்னணி பொறியியல் கல்வி மையங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொழிற்பயிற்சி, களப்பயணங்கள், தொழில்துறை இணைப்புகள் மற்றும் தேசிய மட்டப் போட்டிகள் ஊடாக மாணவர்கள் தொழில்முறை உலகிற்குத் தயார்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்விசார் பணியாளர்கள் சார்பில் உரையாற்றிய பொறியியலாளர் எச்.பி.ஏ. ஜயசிறி, E/24 மாணவர்கள் கடுமையான போட்டியை வென்று பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ள திறமையாளர்கள் எனக் குறிப்பிட்டார்.
சுயகற்றல், ஒழுக்கம், குழுப்பணி, புதுமை மற்றும் தொழில்முறை பொறுப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, பொதுக் கருப்பொருள் நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளரும் இயந்திரப் பொறியியல் துறை விரிவுரையாளருமான பொறியியலாளர் எஸ்.எம். சாஹிப் நன்றியுரையாற்றினார். நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
புதிய கல்விப் பயணத்தை ஆரம்பிக்கும் E/24 மாணவர்களுக்கு கல்வியாளர்கள், சிரேஷ்ட மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், பகிடிவதை மற்றும் பரீட்சை முறைகேடுகளற்ற ஒழுக்கமான பல்கலைக்கழகச் சூழலை உருவாக்கும் உறுதியுடன் நிகழ்வு நிறைவுற்றது
No comments: