சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை தாமதமின்றி ஆரம்பிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, ஜனாதிபதி செயலக செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் Voice of Maruthoor அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்முனை மாநகர சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த சாய்ந்தமருது மக்கள், தங்களுக்கென தனித்துவமான உள்ளூராட்சி மன்றமொன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நீண்டகாலமாக ஜனநாயக மற்றும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். அந்த மக்கள் அபிலாஷையின் விளைவாக, 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதியிட்ட 2162/50 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சாய்ந்தமருது நகர சபை சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.
பின்னர் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்த சட்டச் சிக்கல்களை அடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 2026 மே 07 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் சாய்ந்தமருது நகர சபையை உருவாக்கிய வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியாகும் எனவும், அதற்கான தேர்தல் இதுவரை நடத்தப்படாத போதிலும் அது ஒரு சட்டப்பூர்வ உள்ளூராட்சி அதிகார சபையாக தொடர்கிறது எனவும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், நகர சபைகள் கட்டளையின் 9ஆம் பிரிவின் பிரகாரம் 2022 மார்ச் 20 ஆம் திகதி முதல் சாய்ந்தமருது நகர சபையின் பதவிக்காலம் ஆரம்பமானதாகக் கருதப்பட வேண்டிய நிலை காணப்படுவதால், அதன் நிர்வாகச் செயற்பாடுகளை இனியும் தாமதப்படுத்துவது நியாயமற்றதாகும் என அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நகர சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நிர்வாக மற்றும் பூர்வாங்க நடவடிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளதாகவும், அவற்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சாய்ந்தமருது நகர சபைக்கென செயலாளர் மற்றும் தேவையான பணியாளர்களை நியமித்தல், நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குதல், தேர்தல் மற்றும் நிர்வாக வட்டார எல்லைகளை உறுதிப்படுத்துதல், வட்டாரங்களுக்கு உத்தியோகபூர்வ பெயர்களை வழங்குதல், நகர சபை அலுவலகத்தை நிறுவுதல் மற்றும் அடிப்படை நிர்வாக வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என Voice of Maruthoor அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சாய்ந்தமருது மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்தின் விளைவாக சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ள இந்த நகர சபையின் செயற்பாடுகள் இனியும் முடக்கப்பட்ட நிலையில் தொடரக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள அமைப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மக்கள் எதிர்பார்ப்புகளையும் மதித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தேவையான நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
No comments: