News Just In

8/24/2024 10:32:00 AM

கொழும்பு நோக்கிப்பயணித்த பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு: காப்பாற்றப்பட்ட பயணிகள்!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த அரச பேருந்தின் சாரதி ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.




நேற்று (23 ஆம் திகதி) இரவு 8.15 மணியளவில் சாரதி திடீரென உயிரிழந்ததாகவும், பேருந்து வீதியை விட்டு விலகி நின்றதாகவும் இங்கினியாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று 23ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் அம்பாறை டிப்போவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பேருந்தின் சாரதி உடல் நலக்குறைவு காரணமாக இங்கினியாகலையில் பேருந்தை நிறுத்திவிட்டு தனியார் வைத்தியசாலை வைத்தியரிடம் மருந்து எடுத்துக்கொண்டு கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளார்.

சாரதியின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பேருந்தை செலுத்தி செல்ல வேண்டாம் என வைத்தியர் அறிவுறுத்திய நிலையில், வேறு சாரதிகள் இல்லாத காரணத்தினால் 10 மைல் தூரம் வரை பேருந்தினை செலுத்திச்சென்றுள்ளார்.

இதன் பின்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உடனடியாக இங்கினியாகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதன்போது பேருந்து வீதியை விட்டு விலகியதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு மாத்திரம் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், விபத்து ஏற்படும் போது பேருந்தில் 40 பயணிகள் இருந்ததாகவும் பேருந்தின் நடத்துனர் தெரிவித்துள்ளார்.

பரகஹகலே பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய மஞ்சுள பிரசன்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கினியாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: