News Just In

3/08/2026 03:55:00 PM

பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் சமத்துவமான, பாதுகாப்பான, மலர்ச்சியான, விரும்பத்தக்க உலகத்தை எப்படி உருவாக்கலாம்?

பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் சமத்துவமான, பாதுகாப்பான, மலர்ச்சியான, விரும்பத்தக்க உலகத்தை எப்படி உருவாக்கலாம்?
வழி சொல்கிறார் இளம் பெண் செயற்பாட்டாளரும் சமூக சேவகியுமான கிருஷ்ணபிள்ளை ரேணுகா.



நேர்காணல்: ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இவ்வாண்டின் சர்வதேச மகளிர் தினத்திற்கான உலகளாவிய கருப்பொருளாக “உரிமைகள். நீதி. செயல். அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக” (Rights. Justice. Action. For ALL Women and Girls) என்பதை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

மகளிரின் சாதனைகள், அவர்களால் சமூகம் பெற்ற நன்மைகளை வெளிக்கொண்டு வரும் சமூகப் பணிகளில் தடம் பதித்துள்ள பல்துறைசார் சாதனைப் பெண்களின் பட்டியலில் தனது 21வது வயதிலிருந்து இரத்ததானம் செய்து வருவதற்காக ரேணுகாவும் இடம்பிடித்துள்ளார்.

எனவே, இவ்வாண்டின் சர்வதேச மகளிர் தின கருப்பொருள் அமுலாக்கப்பட வேண்டிய வழிவகை குறித்து தனது கரிசனைகளை வெளியிடுகிறார் இளம் பெண் செயற்பாட்டாளரும், சமூக சேவகியுமான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை ரேணுகா.

இவ்வாண்டின் மகளிர் தினக் கருப்பொருள் மிகவும் பொருத்தமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது. “உரிமைகள். நீதி. செயல். அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக" என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது ஓர் அழுத்தமான செயல்திட்டமும் கூட.

இதுகுறித்து எனக்குப் பல விசயங்கள் மனதில் தோன்றுகின்றது

1.உரிமைகள்: சட்டப்புத்தகத்தில் இருந்து வாழ்வியல் யதார்த்தத்திற்கு

பெண்களுக்கான உரிமைகள் பல நூற்றாண்டுகளாகப் பேசப்பட்டு, சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. ஆனால், இன்றும் கூட ஒரு பெண் தனது சொந்த உடல், சொந்த முடிவுகள், சொந்த சுதந்திரம் குறித்து முழு அதிகாரம் செலுத்த முடியாமல் போவது ஏன்? பேசப்படும் உரிமைகள் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும். ஒரு பெண் இரவில் தனியாக வீதியில் நடந்து செல்வதும், அவள் விரும்பும் துறையில் தலைமைப் பொறுப்பேற்பதும், அவளுடைய விருப்பத்திற்கேற்ப வாழ்வதுமே உண்மையான உரிமை.

2.நீதி: அனைவருக்கும் சமமான பாதுகாப்பு

நீதி இன்றும் பல பெண்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. சமூகத்தின் மத்தியில் பெண்களுக்கு நீதி கிடைப்பது என்பது இன்னும் பெரும் சவாலாகவே இருக்கிறது. நீதி என்பது நீதிமன்றத்தில் மட்டும் முடிவடைவதல்ல, அது அவளுக்கு எதிரான அநீதி, பாகுபாடு, வன்முறை ஆகியவை உடனடியாகத் தடுக்கப்படுவதைக் குறிக்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் நீதி பாய்ச்சப்பட வேண்டும்.

3. செயல்பாடு:

“செயல்” என்பதில்தான் இந்தக் கருப்பொருளின் உயிர்நாடி இருக்கிறது. பேசுவதும், விவாதிப்பதும் மட்டும் போதாது. செயல்பட வேண்டும். அந்தச் செயல் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. ஒரு தாய் தன் மகனுக்கும் மகளுக்கும் சமமான சுதந்திரம் கொடுப்பது, தந்தை சமையலறையில் துணை நிற்பது, கணவன் மனைவியின் கனவுகளுக்குத் தோள் கொடுப்பது, சகோதரன் தன் சகோதரியின் கருத்துக்கு மதிப்புக் கொடுப்பது - இவை அனைத்துமே சக்தி வாய்ந்த செயல்கள். பணியிடங்களில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதும், பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் அவசியமான செயல்கள்.

எனவே, இந்த மகளிர் தினத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போம். நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் உரிமைகள் மதிக்கப்படுகின்றனவா? அவர்களுக்கு நீதி கிடைக்கிறதா?

உரிமைகளை உறுதி செய்வதும், நீதியை நிலைநாட்டுவதும், தொடர்ந்து செயல்படுவதும் மட்டுமே அனைத்துப் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் சமத்துவமான, பாதுகாப்பான, மலர்ச்சியான, விரும்பத்தக்க உலகத்தை உருவாக்கும்.

No comments: