(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மகளிர், சிறுவர்கள் விவகார அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி வாரம் தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
“வியத்தகு சிறுவர் உலகத்திற்கு ஒளிவிளக்காகும் அன்பான குடும்பம்" என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டுக்கான தேசிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி வாரம் ஜூலை 14 முதல் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களால் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றப்பட்டதுடன், நிகழ்வின் நிறைவில் பங்கேற்ற மாணவர்கள் அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதர்சினி, கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ. தாஹிர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஐ.எம். ஸாஹித், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம். தாஹிர், முன்பிள்ளைப்பருவ மாவட்ட இணைப்பாளர் ஏ. முரளிதரன், மாவட்ட செயலக பதவி நிலை உதவியாளர் ஏ.எம். றிழா, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம். சர்ஜுன், எஸ். சசிதரன், விளையாட்டு உத்தியோகத்தர் கே. சங்கீதா உட்பட சிறுவர் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments: