ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மோரேனோ தலைமையிலான பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பர்ட், இத்தாலிய தூதுவர் டாமியானோ பிரான்கோவிக், நெதர்லாந்து தூதுவர் வீப் டி போயர் மற்றும் ஜெர்மனி தூதுவர் பெலிக்ஸ் நியூமன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக்குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை (21) யாழ்ப்பாணத்திற்கு முக்கிய விஜயமொன்றை மேற்கொள்கின்றனர்.
இந்த உயர்மட்ட இராஜதந்திரக் குழுவின் விஜயமானது, பிராந்தியத்தின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, விசேட தூதுக்குழுவினர் யாழ்ப்பாணம் நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ள செம்மணி புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகளை நேரடியாகச் சென்று பார்வையிட உள்ளனர். 1996 ஆம் ஆண்டில் யாழ். குடாநாட்டை இராணுவம் மீளக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழ் பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், 1998 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு மற்றும் அவரது தாய், சகோதரன், அயலவர் உட்பட நால்வர் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னரே இந்த செம்மணி புதைக்குழி பற்றிய விபரங்கள் முதன்முதலில் உலகிற்கு வெளிச்சத்திற்கு வந்தன. இக்கொலைச் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இப்பகுதியில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது அம்பலமானது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், கடந்த பெப்ரவரி மாதம் மயானத்திற்கு அருகே தொழிலாளர்கள் வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டிய போது மீண்டும் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, தற்போதைய அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமாகின. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தொல்பொருள் ஆய்வாளர்கள், தடயவியல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் யாழ். சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் பல கட்டங்களாக இந்த அகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை வரை மேலும் 11 மனித உடலங்களின் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மனித எச்சங்களின் எண்ணிக்கை 423 ஆக அதிகரித்துள்ளது. இந்த அகழ்வுகளின் போது உடல்களுடன் ஆபரணங்கள் மற்றும் சில கலைப்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுடன் விசேட கலந்துரையாடலை முன்னெடுக்க உள்ளனர். அத்துடன், யாழ். வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளையும் சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்துக் கேட்டறியவுள்ளனர். இறுதி அஞ்சலியோ அல்லது நீதியோ இன்றி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் நிலவரம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தரவுகளின்படி, பதிவாகியுள்ள 22,000 காணாமல் போனோர் வழக்குகளில் 6,000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்தே கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த அதிகாரப்பூர்வ சந்திப்புகளைத் தொடர்ந்து, தூதுக்குழுவினர் யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: