News Just In

7/15/2026 11:56:00 AM

நியூசிலாந்து நாட்டிலிருந்து வருடத்திற்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பும் திட்டம்!


நியூசிலாந்து நாட்டிலிருந்து வருடத்திற்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பும் திட்டம்
 மட்டக்களப்பில் சுற்றுலா வளர்ச்சிக்கு நியூசிலாந்து உதவும்.


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

நியூசிலாந்து நாட்டிலிருந்து வருடத்திற்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பும் திட்டம் பற்றியும் மட்டக்களப்பின் சுற்றுலா, மீன்பிடி அபிவிருத்தி குறித்தும் மட்டக்களப்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து நாட்டின் உயர் ஸ்தானிகர் டேவிட் பைன் உட்பட தூதரக அதிகாரிகள் குழுவினர், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜையும் மாவட்ட நிருவாக அதிகாரிகளையும் செவ்வாயன்று 14.07.2026 சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கூடவே, மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள், எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புக்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது;.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடர் முகாமைத்துவம், சுற்றுலாத்துறை, மீன்பிடி, பொருளாதார முன்னேற்றம் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கருத்தக்கள் பரிமாறப்பட்டன.

கலந்துரையாடலின்போது கருத்து வெளியிட்ட உயர் ஸ்தானிகர் டேவிட் பைன், விரைவில் வருடத்திற்கு சுமார் ஒரு இலட்சம் நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார். இந்த முயற்சி மட்டக்களப்பு உள்ளிட்ட பிராந்தியங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், பாசிக்குடாவை மாதிரியாகக் கொண்டு கிழக்கு கரையோரத்தின் ஏனைய பகுதிகளையும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களாக அபிவிருத்தி செய்து, மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதற்கு தாம் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

அத்துடன், மாவட்டத்தின் மீன்பிடித் தொழிலின் தற்போதைய நிலை, இறால் உற்பத்தி, கடல்சார் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலும் உயர் ஸ்தானிகர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். அதற்கான விளக்கங்களை மாவட்ட அதிகாரிகள் வழங்கினர்

No comments: