
நீட் (NEET) உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து இன்று (20) புது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், தேசியத் தேர்வு முறையில் வெளிப்படையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை டெல்லி பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன் தடியடியும் நடத்தினர்.
பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து பல மாணவர்கள் சிதறி ஓடியதுடன், சிலர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மே மாதத்தில் தொடங்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சி (CJP), இந்தியாவின் கல்வி முறை, வேலைவாய்ப்பின்மை மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான அதிருப்தியை மையமாகக் கொண்டு அண்மைக் காலங்களில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.
இந்தப் போராட்டம், CJP-க்கு ஆதரவாக 20 நாட்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் தீவிரமடைந்தது.
இதற்கிடையில், போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மத்திய டெல்லியின் சில பகுதிகளில் அமலில் இருந்த தடையுத்தரவை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி பொலிஸார் தெரிவித்தனர்.
அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக CJP-யின் இரண்டு பிரதிநிதிகள் மூத்த அமைச்சரொருவரைச் சந்தித்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்ததாக இயக்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, போராட்டத்தை ஒட்டி மத்திய டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதுடன், மாணவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டம் மிகத் தீவிரமடைந்து, மாணவர்கள் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயில்களை நெருங்கியதை அடுத்து, நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் அனைத்து பாதுகாப்புக் கதவுகளும் அவசரமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்றத்திற்குள் இருந்த மூத்த அரசு அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மிக அருகில் திரண்டு முழக்கமிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வாகன அணிவகுப்பு, நாடாளுமன்ற வளாகத்தை விட்டு அவசரமாக வெளியேறியது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ராஜீவ் சவுக், ஜன்பத், படேல் சவுக், மத்திய செயலகம் உள்ளிட்ட 5 முக்கிய டெல்லி மெட்ரோ தொடருந்து நிலையங்களின் நுழைவு வாயில்களும் உடனடியாக மூடப்பட்டன.
நாடாளுமன்றத்தின் உள்ளேயும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நீட் முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக கடும் முழக்கங்களை எழுப்பியதால் அவையும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்றப் பகுதி பலத்த ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
No comments: