
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடர்பான செய்தியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாடு முழுவதற்குமான பேசுபொருளாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் அமைந்தது. அவர்கள் போராட்டத்தின் வலிமையை உணர்ந்து, அரசு அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை அடுத்து, அவர்கள் மூன்று நிபந்தனைகளை அரசுக்கு விதித்துள்ளனர். அதேநேரத்தில், அரசு தரப்பிலும் போராட்டக்கார்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தின் மிக முக்கிய பேசுபொருளான இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தங்கள் போராட்டத்தின் ஹைலைட் நிகழ்வாக இன்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணியாகச் செல்ல இருந்தனர். அவர்களின் கோரிக்கைளுக்கும் பேரணிக்கும் எதிர்க்கட்சிகள் ஆதரவாக இருந்தன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, நாடாளுமன்றத்துக்கு உள்ளே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை எதிர்கொள்வதைவிட, நாடாளுமன்றத்துக்கு வெளியே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தை எதிர்கொள்வது அரசுக்கு பெரிய சவாலாக இருந்தது.
கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடைபெற்ற போதிலும், போராட்டக்களமான ஜந்தர் மந்தரில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்பதால் அரசு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரை கண்டுகொள்ளாமல் இருந்தது.
ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த சோனம் வாங்சுக், கடந்த சனிக்கிழமை போராட்டக்களத்தில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்தே போராட்டம் தீவிரமடைந்தது. உள்ளுக்குள்ளும் வெளியிலும் இருந்து கிடைத்த ஆதரவு காரணமாக இன்றைய போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரை ஜந்தர் மந்தரிலேயே முடக்கிவிட எண்ணி இருந்த காவல் துறையினருக்கு காலை முதலே பெரும் சவால் காத்திருந்தது. போராட்டக்காரர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்ததாலும், அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருந்ததாலும் போராட்டத்தின் வீரியத்தை காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை.

தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போலீஸார் மேற்கொண்ட முயற்சிகள் போதிய பலனளிக்கவில்லை. மாறாக, போலீஸாருக்கு எதிராகவே அது திரும்பியது. கைகளில் கிடைத்த கற்களைக் கொண்டு போராட்டக்காரர்கள் வீசியதில் போலீஸார் சிலர் காயமடைந்தனர். அதேபோல், போலீஸார் நடத்திய தடியடி காரணமாக போராட்டக்காரர்களிலும் சிலர் காயமடைந்தனர்.
இந்த போராட்டம் காரணமாக மத்திய டெல்லியின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி மெட்ரோ நிர்வாகம் இன்று 5 ரயில் நிலையங்களை மூடியது. இதனால் டெல்லியின் பல மெட்ரோ நிலையங்களில் குழப்பமான சூழல் நிலவியதால், ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டதோடு, ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்டப் பகுதிகளில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபியினர் மேற்கொண்ட பேரணி
நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த அதேநேரத்தில், நாடாளுமன்றத்திற்குள்ளேயும் நிலைமை தீவிரமாகவே இருந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்குக் கூடிய சில நிமிடங்களில் அவை ஒத்திவைக்கப்பட்டன. அந்த அளவுக்கு எதிர்க்கட்சிகளின் அமளி தீவிரமாக இருந்தது. அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் எந்த விவாதங்களும் இன்று நடைபெறவில்லை.
No comments: