“மார்ச் 8 – எங்கள் நாளா”?
“மார்ச் 8 – எங்கள் நாளா”?
உலகம் மலர்கள் கொடுக்கும் நாள்
வாழ்த்து மழை பொழியும் நாள்
ஆனால்…
அகதிக் கூடாரத்தின் ஈர மண்வாசலில்
மாதவிடாய் வலியால் மடிந்து கிடந்த
என் தாய்க்கு
அந்த நாள் வந்ததா?
சர்வதேச மகளிர் தினம்
பட்டாம்பூச்சி போல் நகரங்களில் பறந்தது
ஆனால்..
பரிதாபத்துக்குரியவளாய் பாதையில்
குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்த
அந்த முஸ்லிம் பெண்ணின்
பாத ரத்தத்தைத் தொட்டதா?
35 ஆண்டுகள் உருண்டோடியும்
வடக்கிலிருந்து விரட்டப்பட்ட
ஏதிலிய முஸ்லிம் பெண்களாகிய
எங்கள் பெயர்கள்
இருப்பை மீள் நிலை நிறுத்த
ஏதேனும் மேடைகளில்
அழைக்கப்பட்டதா?
“உரிமைகள். நீதி. செயல்.” இவ்வருட அனைத்துலக மகளிர் தினம் – எங்கேயும் இருக்கிறதா எங்களுக்கு?
“Rights. Justice. Action. For ALL Women and Girls”
என்று இயம்புகிறது இவ்வையகம்.
ALL என்ற ஒட்டுமொத்த வார்த்தையில்
நாங்களும் இருந்தோமா?
எங்கள் சான்றிதழ்கள் எரிந்த இரவில்
எங்கள் கனவுகள் சாம்பலானது.
நீதி எங்கே?
அந்த இரவுக்கான?
அந்த அச்சத்துக்கான?
கருவில் இறந்த கனவுகளுக்கான?
செயல் எங்கே?
தோட்ட வேலைக்குச் சென்ற
பட்டப்படிப்பு பெண்ணுக்காக?
உரிமை எங்கே?
விதவையாக மாறிய
அந்த 20 வயது மங்கைக்கு?
“அகதிப் பெண்ணின் கர்ப்பம்”
கர்ப்பம் —
புனிதமான பாதுகாப்புக் காலம் என்று புகழ்கிறார்கள்.
ஆனால்..
பயணத்தின் பாதியில்
அதிர்ச்சியின் நடுவில்
அச்சத்தின் மத்தியில்
வலியைத் தாங்கிய அந்தப் பெண்
தன் கருவை காப்பாற்ற
உலுத்தர்களை எதிர்கொண்டு போராடினாளே!!
அவளது கண்ணீருக்கு கனதி இருந்ததா?
யார் நீதிபதி?
அவளது சிதைந்த உடலுக்கு
யார் ஆறுதல்?
“நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்”
மகளிர் தின மேடைகளில்
சக்தி பற்றி பேசும்போது
நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.
ஏனெனில்..
எங்கள் சக்தி
வாழ்ந்து மீண்டதில்தான்.
ஆனால்..
வாழ்ந்துவிட்டோம் என்பதற்காக
நீதி தேவையில்லை என்பதா?
வாழ்விடத்திலிருந்து
வலிந்து விரட்டப்பட்டு 35 ஆண்டுகள் கடந்தும்
நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம் —
ஒரு மலருக்காக அல்ல,
ஒரு வாழ்த்துக்காக அல்ல,
ஒரு உரிமைக்காக.
ஒரு நீதிக்காக.
ஒரு உண்மையான செயலுக்காக.
இறுதி வரிகள்
வருடந்தோறும் வருகிறது வாகை சூட
சர்வதேச மகளிர் தினம்
வாய் நிறைந்தபடி வாழ்த்துகிறது.
ஆனால்
வடக்கிலிருந்து விரட்டப்பட்டு
கதியற்றுக் கண்கலங்கும்
அகதி முஸ்லிம் பெண்ணின்
ஆதங்கத்தை அது கண்டு கொள்ளவே இல்லை,
“உலக மகளிர் தினம்…
எங்களை ஏறெடுத்தப் பார்த்ததா??”
இந்த உள்ளக் குமுறல் சமூகப்பணி, சமூக செயற்பாட்டாளர் ஐ. ஆயிஷாபானுவின் சிந்தனையில் வெளிப்பட்டது. அவர் 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுடன் மேற்கொண்ட கள ஆய்வு அனுபவங்களையும், தனது குடும்ப நினைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு இதனைப் பதிவாக்கியுள்ளார்.
தொகுப்பு : ஏ.எச்.ஏ.ஹுஸைன்
3/08/2026 04:00:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments: