இளைஞர் விவகார பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்நாயக்க ஏறாவூரில் அறைகூவல்
சிங்கள இதயங்களுக்குள் தமிழ் முஸ்லிம் மக்கள் மீதான கருணையும், தமிழ் முஸ்லிம் இதயங்களுக்குள் சிங்கள மக்கள் மீதான கருணையும் மலர்ந்து ஒளிவீசட்டும். அந்த நாள் உருவாக மூவின இளைஞர் யுவதிகளும் ஒன்றிணைய வேண்டும் என இளைஞர் விவகாரப் பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்நாயக்க அறைகூவல் விடுத்தார்.
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து தேசிய ரீதியாக முன்னெடுக்கும் இன, சமூக நல்லிணக்கத்தினை மேம்படுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு ஏறாவூரில் சனிக்கிழமை 07.03.2026 இடம்பெற்றபோது பிரதியமைச்சர் இதனைப் பிரஸ்தாபித்தார்.
அனுராதபுரம் மாவட்ட சிங்கள சமூக இளைஞர் யுவதிகளும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளும் இணைந்து ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் ஒருங்கிணைந்த, பாரம்பரிய, கலாச்ச, விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இளைஞர் சேவை உத்தியோகத்தர் பி. கிஸ்கந்தமுதலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் விவசாய, காணி, நீர்ப்பாசன, கால்நடை வளர்ப்பு அமைச்சின் மாவட்ட இணைப்புச் செயலாளர் கே. திலகநாதன், இளைஞர் சேவைவகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் ஏ. ஹமீர், மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிஷாந்தி அருள்மொழி, மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி எம். சசிகுமார் உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாறிறிய பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்நாயக்க இந்த நாட்டில் இனிமேல் யுத்தம், இனவாதம், மதவாதம் போன்ற சமூகங்களைக் குழப்பும் அரசியல் சதி நாச வேலைகள் செய்ய இனிமேல் அனுமதிக்க மாட்டோம்.
நாம் எல்லோரும் அரசியல் சதிகளால் பிளவுபடுத்தப்பட்டு யுத்தத்தில் அடிபட்டோம். அரசியல் சதிகளால் காலத்துக்காலம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை மாறி மாறி அடித்துக் கொள்ள வைத்தார்கள். தமிழ், முஸ்லிம், சிங்கள இனங்களுக்கிடையில் தனித்துவம் உண்டு அவற்றை கண்ணியமாக மதித்து வாழ இனி வழி செய்ய வேண்டும். துக்கத்திலும் சந்தோசத்திலும் நாம் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டும்.
நாம் எல்லோரும் சிறந்த மனிதர்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணையும் தேசத்தை உருவாக்குவது அனைத்து சமூக இளைஞர் யுவதிகளின் ஒருங்கிணைவிலேயே உள்ளது. அந்தக் காலம் வெகு விரைவில் மலரும்.” என்றார்
No comments: