News Just In

6/23/2023 09:31:00 AM

நீர்மூழ்கி கப்பல் டைட்டானிக் அருகே வெடித்து சிதறியிருக்கும்?






டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

உலக புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலை கடலுக்கு அடியில் பார்க்க சென்ற நீர்மூழ்கி கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டிக் கடல் பகுதியில் காணாமல் போனது.

இதில் பிரித்தானிய பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங், பிரித்தானிய தொழிலதிபர் ஷாஜதா தாவூத் அவரது மகன் சுலோமான் தாவூத் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஓஷன்கேட்டின் தலைமை நிர்வாகி ஸ்டாக்டன் ரஷ் இவர்களுடன் பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் பைலட் பால்-ஹென்றி ஆகிய 5 பேர் பயணித்த நிலையில் நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

இதற்காக பல்வேறு சர்வதேச நாடுகளை சேர்ந்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி வாகனங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

இறுதியில் இன்று டைட்டானிக் கப்பல் மூழ்கி இருந்த கடல் பகுதிக்கு மிக அருகில் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் குப்பை கூளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் சுமார் 1600 அடி ஆழத்தில் கடல் படுக்கையில் இருந்த இந்த குப்பை களங்களில் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் வால் கூம்பு பகுதி கிடப்பதை நீர்மூழ்கி ரோபோ கண்டுபிடித்து இருப்பதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரிகள், நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் இருந்த போது அழுத்தம் காரணமாக பயங்கரமாக வெடித்து சிதறி அதில் 5 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.



மேலும் டைட்டானிக் கப்பல் சுற்றுலா தொடர்பாக காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் குறித்த சர்வதேச தேடல் தற்போது கடுமையான சூழ்நிலையில் நிறைவு பெறுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.





No comments: