News Just In

12/16/2022 01:19:00 PM

கொழும்பில் கடத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த பிரபல வர்த்தகர்!





கொழும்பில் கடத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளரும்,இலங்கைகிரிக்கெட்நிறுவனத்தின்ஊடகமுகாமையாளராக பணியாற்றிய நபருமான சந்தேகநபரை கண்டுபிடிக்கும் நோக்கில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த சந்தேகநபருக்கும், தினேஷ் சாப்டருக்கும் இடையில் 138 கோடி ரூபா கொடுக்கல், வாங்கல் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த தொகையை செலுத்தாத காரணத்தால் சந்தேகநபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் சாப்டர் கடத்தப்பட்டு நேற்று மாலை பொரள்ளை மயானத்தில் கார் ஒன்றிற்குள் இருந்து கைகள் கட்டப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தினேஷ் சாப்டர் கறுவாத்தோட்டம் ப்ளவர் வீதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியேறி சிறிது நேரத்தின் பின் அவரது மனைவி அவரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போது, வர்த்தகரின் தொலைபேசி இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தொலைபேசி ஊடாக கிடைத்த சிக்னல்களுக்கு அமைய விசாரணை நடத்தியபோது அவரது தொலைபேசி பொரளை மயானத்திற்கு அருகில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதில் சந்தேகமடைந்த அவரது மனைவி, விரைந்து செயற்பட்டு நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரிடம் கூறி பொரளை மயானத்திற்கு அருகில் பார்க்குமாறு அனுப்பி வைத்துள்ளதாக தெரியருகிறது.

இதன்போது, அங்கிருந்த காரொன்றில் தினேஷ் சாப்டர் கைகள் கட்டப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அங்கு சாரதியும் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன்பின், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் தினேஷ் சாப்டர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளார்.

No comments: