News Just In

8/27/2022 08:57:00 AM

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!!




பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட "ஜனாதிபதியின் சௌபாக்கியத்தின் நோக்கு" எனும் தொனிப்பொருளில் "பாதுகாப்போம் பூமியை" எனும் திட்டத்திற்கு அமைவாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கூட்டொரு தயாரிக்கும் பயனாளிகளை ஊக்குவிக்கும்முகமாக இன்று (26) திகதி அவர்களுக்கான விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னால் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்ததுடன், பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களையும் வழங்கி வைத்துள்ளார்.

இத்திட்டத்தின் ஊடாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் 449 பயனாளிகளுக்கு குறித்த விவசாய உபகரணத்தொகுதி வழங்கவுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக இன்று 134 பயனாளிகளுக்கான உபகரணத்தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது முன்னால் இராஜாங்க அமைச்சரின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாக 9 சுயதொழில் முயற்சியாளர்களிற்கு தையல் இயந்திரங்களும், மேலும் பல சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவிப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய கமத்தொழில் பல்வகைப்படுத்துகை குடியேற்ற அதிகாரசபையின் அனுசரனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்விற்கு உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன், தேசிய கமத்தொழில் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எட்டு இலட்சத்தி அறுபத்தியொராயிரம் ரூபாய் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 13 பயனாளிகளுக்கான உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: