News Just In

6/14/2021 08:53:00 PM

சாய்ந்தமருதில் தடுப்பூசி வழங்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தி- அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதே பாதுகாப்பானது- வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சாய்ந்தமருதில் பூர்த்தி செய்யப் பட்டுள்ளது. தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றதும் அவை பொதுமக்களுக்கு உடனடியாக வழங்கப்;படும். எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்வதே அனைவருக்கும் பாதுகாப்பானது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்; எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்குவது சம்பந்தமாக விளக்கமளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,
எந்த நேரத்திலும் தடுப்பூசி வழங்குவதற்கு ஆயத்தமாக அதற்கான வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, தடுப்பூசி வழங்குவதற்கான இறுதி கட்டத்திலே இருக்கிறோம். முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட கொரோனா தாக்கம் காணப்படும் கிராமசேவகர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வுள்ளது.

ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுகளிலும் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுடைய கிராமசேவகர் பிரிவுகளில் முன்கூட்டியே பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறும்; கோரப்பட்டுள்ளனர்.

அத்தோடு, பொதுமக்களோடு நேரடியாக நெருங்கிய தொடர்பில் உள்ள அரச உத்தியோகத்தர்களான கிராம சேவை உத்தியோக த்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், வங்கிகளில் வேலைசெய்வோர், மின்சாரசபை, நீர் வழங்கல் அதிகார சபையில் வேலைசெய்வோர் போன்ற மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோர், அந்தப் பகுதியில் உள்ள ஆமி, நேவி, பொலிஸ் போன்ற பாதுகாப்பு தரப்பில் உள்ளோருக்கும் முதல் கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு யாரும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. தடுப்பூசிகள் மூலமாக பக்க விளைவுகள் ஏற்பட்டதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உதாரணத்திற்கு நாம் காய்ச்சலுக்காகப் பாவிக்கும் பரசிடமோலிலும் ஆயிரம் பக்கவிளைவுகள் உள்ளன. அதனுடைய பக்கவிளைவுகளை எடுத்தப் பார்த்தோமானால்; நாம் யாரும் பரசிடமோலைக் கூட பாவிக்க முடியாது.

எனவே, அனைத்து மக்களும் தடுப்பூசியை எடுத்துக் கொண்டால்த்தான் நோயின் தாக்கத்திலிருந்து அனைவரும் பாதுகாத்துக் கொள்ளலாம். நாட்டில் 80 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசிகள்; வழங்கப்படுமாக இருந்தால்; ஏனைய நாடுகள் போன்று எமது நாட்டிலும் சாதாரணமாக வாழலாம்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் அநேகமான மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு முகக் கவசங்கள் கூட அணியாது அங்குள்ள மக்கள் சாதாரணமாக உலாவுகின்றனர், வாழ்கின்றனர்.

கர்ப்பிணித் தாய்மாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அவர்களும் பயப்படத் தேவையில்லை. கர்ப்பிணித் தாய்மார்களில் முதல் 3 மாதங்கள் கழித்தவர்கள் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம்.

கர்ப்பிணித் தாய்மார்களில் சீனி, பிரஸர் போன்ற தொற்றா நோய் உள்ளவர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்வதன் ஊடாக அவர்களது குழந்தைக்கும் தாய்க்கும் பாதுகாப்பாக இருக்கும்.

தடுப்பூசி சம்பந்தமாக சமூக ஊடகங்கள், வட்ஸ்அப் மூலமாக உலாவரும் வதந்தியான, போலிச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். அது ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடையாது என்றும் தெரிவித்தார்.

No comments: