News Just In

6/14/2021 09:34:00 PM

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசம் பாரிய சவால்களை எதிர் நோக்குகிறது- பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் சிறாஜி...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்நிலையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசம் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகிறது என்று ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் சிறாஜி தெரிவித்தார்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையானது நாட்டில் பல்வேறு தாக்கங்களை செலுத்தியுள்ள போது, அது ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவையும் தாக்கியுள்ளது.

இதன் காரணமாக ஏராளமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதுவரை இரண்டு மரணங்களும் சம்பவித்துள்ளன.

கொரோனா தொற்று காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மரணிக்கின்ற நபர்களின் உடல்கள் ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியிலே அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் இன்றுவரை (14) 605 உடல்கள் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஓட்டமாவடி பிரதேசம் கடந்த ஆண்டு டெங்கு நோய் தாக்கத்துக்குள்ளான பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாய நிலை காணப்படுவதால், அது குறித்த பிரதேசத்துக்கும் வருமானால் சுகாதார பிரிவினர் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கலாம்.

அத்தனை விடயங்களையும் சுகாதார வைத்திய அதிகாரியும், பொதுச் சுகாதார பரிசோதகர்களும் கையாள வேண்டியுள்ளதால் இவ் அசாதாரண சூழ்நிலையில் பிரதேசத்தின் மேலதிக விடயங்களை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்கலாம்.

அத்துடன், குறித்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை கிழக்கு, மேற்கு மற்றும் மாஞ்சோலை ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் அனைத்து விடயங்களையும் சுகாதாரப் பிரிவினர்கள் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே, ஓட்டமாவடி பிரதேச மக்களின் நலன் கருதியும், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பணிகளை இலகுபடுத்தவும் இவ்விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி குறித்த பகுதிக்கு இன்னுமோர் சுகாதார வைத்திய அதிகாரியையும் மேலதிக பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.

இவ்விடையம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன் என்று பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் சிறாஜி தெரிவித்தார்.

No comments: