News Just In

11/18/2019 05:59:00 PM

இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டியில் மும்பை அணியில் மீண்டும் விளையாடவுள்ள லசித் மாலிங்க

2020ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலத்தையொட்டி, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த பதினொரு வருடங்களாக விளையாடிய இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்கவை தக்கவைத்துக் கொள்ள அந்த அணி தீர்மானித்துள்ளது.

இதேநேரம், நான்கு தடவைகள் ஐ.பி.எல் சம்பியனாகத் தெரிவாகிய மும்பை அணி, இம்முறை தமது அணியில் இருந்து 12 வீரர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன், கடந்த வருடம் அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதற்கு காரணமாக இருந்த 18 வீரர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் தீர்மானித்துள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 2020ஆம் ஆண்டின் பருவத்துக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு எட்டு அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற அணிகளிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இதற்கான காலக்கெடு கடந்த 14ஆம் திகதி முடிவடைந்தது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் (15) எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வெளியேற்றியுள்ளது மற்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்ற விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் ஐ.பி.எல் தொடங்கிய காலத்திலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கையைச் சேர்ந்த ஒரேயொரு வீரரான லசித் மாலிங்கவை தொடர்ந்து அந்த அணியுடன் தக்கவைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments: