நாட்டிலுள்ள சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியன நிலைகொள்ளும் வகையில் நாட்டின் புதிய ஜனாதிபதி செயற்படுவாரென தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இது விடயம் தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை (18.11.2019) ஜனாதிபதியின் பதவியேற்பைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மை தங்கிய கோத்தாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் எனதும் மக்களினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
புதிய ஜனாதிபதி சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியன நிலைகொள்ளும் வகையில் செயற்படுவாரென நம்புகின்றோம்.
நமது நாடென்றவகையில் இன ஐக்கியத்துடனும் சகோதர மனப்பாங்குடனும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல புதிய ஜனாதிபதிக்கு வலிமையும் மனோதைரியமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: