
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர்களின் கருத்தறியும் செயலமர்வானது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் (20.11.2019) திருப்பெருந்துறை சனசமுக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானது யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து சிறுவர் சினேகபூர்வ மாநகரமாக மாற்றியமைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் செயற்றிட்டத்தில் சிறுவர்களின் கருத்துக்களை அறிந்து அதன் ஊடாக அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்படிக் செயலமர்வானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பல வளர்முக நாடுகளில் மேற்படி சிறுவர்நேய மாநகரங்கள் அமையப்பெற்றிருந்தாலும், இலங்கையில் முதல்முறையாகவும் ஏனைய மாநகரக சபைகளுக்கு எடுத்துக்காட்டாக மேற்படி திட்டம் அமையப்பெறவுள்ளதனை நினைத்து தாம் பெருமிதம் கொள்வதாகவும், அத்தகைய சிறுவர் சினேக மாநகரை உருவாக்கும் தமது கனவினை நிறைவேற்ற யுனிசெப் நிறுவனமானது முன் வந்தமையையிட்டு தாம் மனம் நெகிழ்வதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மாநகர முதல்வர், ஒரு நகர பிதாவாக, உங்கள் அனைவருக்கும் எனது இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். மட்டக்களப்பு மாநகர சபை என்ற வகையில் நாங்கள் உங்கள் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன் இந்த மாநகர சபையின் ஆளுகைப் பிரதேசத்தை நாட்டின் முதலாவது சிறுவர் நேயமிக்க ஆளுகைப் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கு நாம் உறுதியாக இருக்கிறோம்.
இந்த நகரத்தை சிறப்பாகவும், உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நட்புறவுமிக்கதாகவும் மாற்றியமைப்பது எப்படி என்பதைப் பற்றி உங்கள் ஆலோசனைகளை அறிய விரும்புகிறேன். மட்டக்களப்பு மாநகர சபை என்ற வகையில் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பானதும், அனைவரையும் உள்வாங்குகின்றதும், ஆரோக்கியமான மற்றும் பசுமையானதுமான மட்டக்களப்பை உருவாக்க கடமைப்பட்டுள்ளோம். நீங்களே எமது எதிர்காலம்.
ஆகவே, எமது சமூக கடமைகளின் போது சிறுவர்களின் நிகழ்ச்சி நிரலை முதன்மைப்படுத்திச் செயற்படுவதற்கு மட்டக்களப்பு நகராட்சியுடன் கைகோர்த்துக்கொள்ளுமாறு எங்கள் சமுதாயம், அபிவிருத்தி பங்காளிகள், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிட்கு அழைப்பு விடுக்கின்றேன்.
நீங்கள் கூறும் விடயங்களை செவிமடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதுடன், இந்த முயற்சியில் தீவிரமாக பங்கேற்பதன் மூலமும் உங்கள் 'பெறுமதிமிக்க கருத்துக்களை' பகிர்ந்துகொள்வதன் மூலமும் உங்கள் உரிமைகளைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் மட்டக்களப்பில் மாநகருக்குள் வதியும் சிறுவர்கள் அனைவரும் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும், முதல்வரிடம் சொல்லுங்கள் எனும் வலைத்தளம் ஊடாகவும், முகநூல் பக்கத்தின் வாயிலாக அல்லது நகரத்தின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஆலோசனை பெட்டிகளின் வாயிலாக பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
மேற்படிக் கருத்தரங்கில் சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் முன்னேற்ற மாவட்ட உத்தியோகத்தர் குகதாசன், மண்முனை வடக்கு பிரதேசட செயலகத்தின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உத்தியோகத்தர் ஊர்மிலா, யுனிசெப் நிறுவனத்தின் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்.அன்ருவ், பிரதம வெளிக்கள அலுவலர் றிபென்சியா, சிர்றி நிறுவனத்தின் தேசிய திட்டப் பணிப்பாளர் தர்சணா ஆகியோருடன் மாநகர சபை உத்தியோகத்தர் சிறுவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.




No comments: