News Just In

11/27/2019 07:12:00 PM

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலேயே அமைச்சு பதவிகள் வகுக்கப்பட்டுள்ளன-ஜனாதிபதி

இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் தமக்குக் கிடைத்த பதவிக்கான சலுகைகள் அல்ல என்றும் அவற்றை மிக முக்கியத்துவம் மிக்க பொறுப்பாக கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது 35 இராஜாங்க அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலேயே அமைச்சு பதவிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிகாட்டினார்.

பொதுமக்கள்; பாரிய மக்கள் ஆணையை வழங்கியுள்ளமை பெரும் எதிர்பார்ப்புடனேயே ஆகும் என்று தெரிவித்த ஜனாதிபதி அதனை நினைவில் நிறுத்தி செயற்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார். இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுகளுக்கான துறைகள் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தமது கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப இது இடம்பெற்றுள்ளது.

பதவிகளின் சலுகைகளை கருத்திற் கொள்ளாது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் பல ஆண்டுகளின் பலனாக மக்களின் எதிர்ப்பார்ப்புகள் இனங்காணப்பட்டுள்ளன. ரயில் சேவைகளை அபிவிருத்தி செய்வது மற்றும் அவற்றை செயற்றிறன் மிக்கதாக கொண்டு நடத்துவது மக்களின் பிரதான தேவையாக உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அதேபோல் நாட்டின் வறுமைநிலையை நீக்க அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரச துறைகளில் வினைத்திறன் அற்ற போக்குகள் இல்லாது செய்யப்படும். இதில் அமைச்சர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு தமது பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர்கள் சந்தர்ப்பம், ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரச துறையை மேம்படுத்துதல், பொது மக்களுக்கு சேவை செய்வதற்கான சந்தர்ப்பம் புதிய யுகத்தை உருவாக்குதல் ஆகியன தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கூறியதுடன் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். இந்த வேலைத்திட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

No comments: