News Just In

10/31/2019 03:24:00 PM

மண்முனைப் பாலம் - படுவான்கரை வீதியின் அவலம்! (படங்கள், காணொளி)

மட்டக்களப்பின் படுவான்கரை மற்றும் எழுவான்கரை என அழைக்கப்படும் இரு பெரும் பிரதேசங்களை இணைக்கும் பாலமாக மண்முனைப் பாலம் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் மக்கள் ஆற்றின் ஊடாக "பாதை" என்று சொல்லப்படுகின்ற ஓடத்திலேயே பயணம் செய்தனர். மண்முனைப் பாலம் அமைக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டில்  திறக்கப்பட்டதன் பின்னர் மக்கள் பாலத்தினுடாக பயணம் செய்து வருகின்றனர்.

எனினும் பாலத்தின் பூரணத்துவம் இல்லாத வேலைப்பாடுகள், பின்னர் நடந்த வீதி அபிவிருத்தி திட்டங்கள், இரவு நேரங்களில் பாலத்தின் மின் குமிழ்கள் ஒளிராமை போன்ற பல காரணங்களால் மக்கள் தற்போதும் அவதியுறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், உத்தியோகத்தர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என பல்லாயிரக் கணக்கான மக்கள் இப் பாதையின் ஊடாகவே பயணம் செய்கின்றனர். பாலத்தின் ஊடான பயணம் இவர்களுக்கு பாதுகாப்பாற்றதாகவே அமைகின்றது. 

குறிப்பாக, ஒவ்வொரு மழைக்காலங்களிலும் பாலத்தின்  கிழக்கு புறம் உள்ள பகுதி அதிகமாக நீரில் மூழ்குகின்றது, இதனால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. இந்த பாலத்தினுடாக பயணிக்கும் பிரயாணிகளின் மோட்டார் சைக்கிள் இயந்திரம் தண்ணீரில் வைத்து செயலிழக்கின்றமையால் பிரயாணிகள் வெள்ள நீரில் விழுகின்ற துர்ப்பாக்கிய நிலையும், இயந்திரம் செயலிழந்த மோட்டார் சைக்கிள்களை  தள்ளிச் செல்ல முற்படும்போது வெள்ள நீரில் உடைகள் நனைந்து பல அசௌகாரியங்களை  எதிர்நோக்குகின்ற நிலையும் ஏற்படுகின்றது.

காலையில் பாடசாலை, அரச திணைக்களங்கள் போன்றவற்றிற்கு செல்லும் ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் பாதி நனைந்த உடையுடனேயே தங்கள் பணியிடங்களுக்குச் செல்வது மிகவும் அவலமான நிலையாகும்.

பெரும் பாதிப்பான விடயம் என்னவென்றால் பாலம் உட்பட படுவான்கரை வீதியை புனரமைத்த வீதி அபிவிருத்தி திணைக்களம் அதனை பூரணத்துவப் படுத்தாமையினால் பாதி  வீதி போடப்பட்டும் மீதி குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால் பல பிரயாணிகள் அதில் விழுந்து, காயம் மற்றும் உயிர் ஆபத்து ஏற்படும் நிலை கூட உண்டாகிறது.

தற்போது பாலத்தின் ஒரு புறம் நீர் தேங்கி நிற்கும் இடத்தில் கொங்கிரிட்  வீதி பகுதியளவு  போடப்பட்டிருப்பது விபத்து ஏற்படுத்தும் நிலையை மேலும் அதிகரித்து இருக்கின்றது. இதற்கு சம்மந்தப்பட்டவர்கள் உடன் தீர்வினை முன்வைக்க வேண்டும்.

இரவு நேரங்களில் பாலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மின் குமிழ்கள் ஒளிராமையால் பிராயணிகளின் நிலை இன்னும் மோசமாகின்றது, முதலை தண்ணீரில் வந்தால் கூட தெரியாது என அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இப் படுவான்கரை வீதி பல முறை செப்பனிடப்பட்டும் குறுகிய காலத்திலேயே குண்டும் குழியுமாக மாறுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. எனவே  இவ் வீதியினை இங்கிருந்து தாந்தாமலை வரை  பிரதான முதல்தர காபட் வீதியாக புனரமைக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தொடர்பான செய்தி
தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்கள் நலன் பேசாது இவ்வாறான மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு செயல் திறனுடன் கூடிய தீர்வினை பெற்றுக் கொடுப்பது அரசியல்வாதிகளின் கடமை, அது போன்று குறித்த செயற்பாட்டை நடைமுறைப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் முன்வர வேண்டும் என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

 
 

No comments: