
படுவான்கரைப் பிரதேசம் வளமிக்க விவசாயநிலத்தினைக் கொண்ட பகுதியாகும். அதனால் இப்பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் அதிகமாக விவசாயத்தினையே தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இங்கு..அதிகமாக நெல் பயிரிடப்படுகிறது.மேலும் நிலக்கடலை, சோளம், பயறு போன்ற தானியங்களும், பல மரக்கறி வகைகளும் இப்பிரதேசத்தில் பயிரிடப்படுகின்றன.
மந்தை வளர்ப்பு இப்பிரதேசத்தில் காணப்படும் சிறப்பம்சமாகும். இங்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவான காணிகள் இலங்கை அரசினால் மேய்ச்சல் நிலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு, மந்தை வழர்ப்பிற்கு அரச அங்கீகாரமளிக்கப் பட்டுள்ளது.
படுவான்கரை பிரதேசம் வாவியினால் எல்லையிடப் பட்டுள்ளதுடன், பல ஆறுகளும் ஏரிகளும் படுவான்கரை பிரதேசத்தினூடாக வந்து வாவியில் கலப்பதால் விவசாயத்திற்கு அடுத்ததாக இங்கு மீன்பிடித்தல் கைத்தொழில் கணிசமான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருவாய் ஈட்டுவதில் படுவான்கரை பிரதேசத்தின் பங்கும் பெரியது.
இவ்வாறு பல நன்மைகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஈட்டித் தருகின்ற படுவான்கரை பிரதேசம் ஒவ்வொரு வருட மாரி மழை வெள்ளத்தின் போதும் பெரிதும் பாதிப்படைக்கின்றது. தற்போது பெய்த மழையின் காரணத்தால் இங்கு பல வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெல்லாவெளி பிரதேசம், பட்டிப்பளை - மண்முனை தென்மேற்கு பிரதேசம், வவுனதீவு மட்டக்களப்பு மேற்கு பிரதேசம் போன்ற பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல வயல்கள் வெள்ளத்தால் நிரம்பியும், நீர் பரவி ஓடியாதல் கால்வாய்கள் உடக்கப்பட்டு மணல் வார்க்கப்பட்டும் காணப்படுகின்றன.
குறிப்பாக பட்டிருப்பு பாலத்தின் அருகாமையில் உள்ள வயல்கள், பட்டிப்பளை, மணப்புட்டி பிரதேச வயல்கள், வவுனதீவு, மகிழவட்டவான், செங்கலடி பதுளை வீதியின் அருகாமையில் உள்ள கிராமங்கள் போன்ற இடங்களில் உள்ள வயல்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வயல் நிலங்களில் தோணி மூலம் மீன்பிடிக்கும் அளவுக்கு நீர் நிரம்பியுள்ளதை பார்க்கக் கூடியவாறு உள்ளது.
இவ் வெள்ளப்பெருக்கு காலா காலமாக இப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்திய வண்ணமே உள்ளது, இதற்கு தகுந்த வடிகால் அமைப்பு இல்லாமையே பிரதான காரணம். இதனால் ஒவ்வொரு வருடத்திலும் பாரிய அளவான ஏக்கர் வயல்கள் நாசமாகபடுகின்றன, விவசாயிகள் ஒவ்வொருவரும் கடனாளி ஆகின்றனர்.
அதுமாத்திரமல்லாது இப் பிரதேசத்தின் போக்குவரத்து பாதையில் கூட வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாணவர்கள், பெண்கள், உத்தியோகத்தர்கள், எனப் பிரயாணம் செய்யும் மக்கள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக வவுணதீவு பாலம், பட்டிருப்பு பாலம் ஆகியன அமைந்துள்ள வீதிகளின் மேலாக வெள்ளம் பரவி ஒவ்வொரு மாரிகால வேளையிலும் ஓடுகின்றது.
வெள்ளம் அதிகம் தேங்கி நிற்பதால் கால்நடைகள் பாதிப்படைக்கின்றன, தொற்று நோய் உண்டாகின்றது சில வேளையில் உயிர் பாதிப்பு கூட உருவாகும் ஆபத்தான நிலை இக்காலப்பகுதியில் அதிகமாக உள்ளது.
மக்களின் குறித்த சூழ் நிலையினை கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு தீர்வினை முன்வைக்கும் எனப் பார்த்துக்கொண்டு இருக்கின்ற வேளையில் அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. எதிர் வரும் காலத்திலாவது அடிப்படை கட்டமைப்புகளுடன் தங்களது பிரதேசம் கட்டியெழுப்படுமா? என அவர்கள் காத்துக்கிடக்கின்றனர்.






























No comments: