எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதியான தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் நவம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்ளுமாறு தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் 15.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 300,000 பேர் தேர்தல் பதிவு படிவத்தில் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்யாத நிலையில் இவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தேசிய தேர்தல் திணைக்களம் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் இரண்டு சதவீதமானோர் தங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்யவில்லை என்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலகே தெரிவித்தார். இதற்காக சிறப்பு அடையாள அட்டையை பெற்றுக்கொடுப்பதற்கான ஒழுங்குகள் தேசிய தேர்தல் திணைக்களம் மூலம் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு செல்லுபடியாகும் அடையாள ஆவணமும் இல்லாத வாக்காளர்கள் தங்களது பகுதி கிராம சேவகர் ஊடாக தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க முடியும். இந்த விண்ணப்ப படிவங்களை முறையாக பூர்த்தி செய்து இதனுடன் 2.5 செ.மீ x 3 செ.மீ அளவிலான வண்ண /கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்களின் இரண்டு பிரதிகளுடன் நவம்பர் 9 அல்லது அதற்கு முன்னர் கிராம சேவை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
பின்னர் தற்காலிக அடையாள அட்டைகள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தால் வழங்கப்படும். இந்த தற்காலிக அடையாள அட்டையானது வாக்காளர் வாக்களித்த பின்னர் வாக்களிப்பு மத்திய நிலையத்தின் அதிகாரியினால் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கபட்ட கடவுச்சீட்டு, வாகன அனுமதிப்பத்திரம், வயதானவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை முதலான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை கொண்டிராதவர்களுக்கு இந்த தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
No comments: