News Just In

11/09/2026 02:22:00 PM

கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்கு இந்திய உதவி?

 கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்கு இந்திய உதவி?


கல்முனை ஆதார வைத்தியசாலையின் அத்தியாவசிய மருத்துவ தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி பணிகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுகொள்ளும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்திய தூதரகத்தின் அரசியல் விவகார செயலாளர் ராம்பாபுவுடன் இந்த சந்திப்பு நவம்பர் 6ஆம் திகதி காலை கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கவி. கோடீஸ்வரன், ஞா. ஸ்ரீநேசன், ரி. சத்தியலிங்கம் ஆகியோருடன் கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் தவிசாளர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் பொருளாளர் இ. ரூபசாந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களின் தேவை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கான முன்னுரிமை திட்டங்கள் குறித்து சுமார் ஒரு மணிநேரம் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு மாகாண மக்களின் முக்கிய சுகாதார சேவை மையங்களில் ஒன்றாக விளங்கும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தேவைகளை இந்திய தரப்பிடம் எடுத்துரைப்பதற்கு இந்த சந்திப்பு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இக்கலந்துரையாடல் திருப்திகரமாக அமைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒத்துழைப்புடன் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

No comments: