எழுத்தாளரும் கவிஞரும் பன்னூலாசிரியருமான வைத்தியர் ஜலீலாவின் எழுத்தாற்றலுக்கும் ஆய்வுரைக்குமாக “கலை வித்தகி” எனும் சிறப்பு அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மூதூர் ஜே.எம்.ஐ. நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவையும் தேசிய வாசிப்பு மாதத்தையும் முன்னிட்டு, இடம்பெற்ற நிகழ்வில், வைத்தியர் ஜலீலாவின் ஆறாவது நூலான “சுவனத்து வைரம்” சிறுகதைத் தொகுப்பு ஜே.எம்.ஐ பதிப்பகத்தின் ஊடாக கடந்த சனிக்கிழமை வெளியீடு செய்யப்பட்டது. அத்துடன், ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் ஹைக்கூ கவிதையின் வளர்ச்சியும் நவீன பரிணாமமும் தொடர்பான வைத்தியர் ஜலீலாவின் ஆய்வுரையும் இடம்பெற்றது. இத்தகைய இலக்கியப் பங்களிப்புக்களைப் பாராட்டி அவருக்கு “கலைவித்தகி” விருதும் சிறப்பித்து வழங்கப்பட்டன.
கடந்த வார இறுதியில் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களாக நடைபெற்ற இந்நிகழ்வுகளில் இலங்கையின் முன்னணிப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்குபற்றினர்.
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 6 ஆய்வரங்குகளில் 15 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. அத்துடன் நாடளாவிய ரீதியாகவுள்ள எழுத்தாளர்களின் 60 இலக்கிய நூல்களும் இலவசமாக வெளியிட்டு வைக்கப்பட்டன.
இலக்கியம், சமூக சேவை, ஊடகவியல், தொழில்முனைவோர், சிரேஷ்ட பிரஜைகள் உள்ளடங்கலாக சுமார் 200 இற்கு மேற்பட்ட ஆளுமைகளுக்கு விருதுகள், போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டுவோருக்கு சுமார் இரண்டு இலட்ச ரூபாவுக்கான பரிசுகள் என்பனவும் வழங்கப்பட்டன.
மேலும், கருத்தரங்கம், வெளியீடு, விருதுகள், போட்டி, புத்தகக் கண்காட்சி, கலை, புகைப்பட மற்றும் கையெழுத்துக் கலைக் கண்காட்சிகளும், உள்ளுர் உற்பத்தியாளர்களின் சந்தைப்படுத்தல் என்பனவும் இடம்பெற்றன.

No comments: