கல்வியாளர் கலாநிதி ஈ.ஜே. சற்குணராஜா அவர்கள் காலமானர் .
கலாநிதி ஈ.ஜே. சற்குணராஜாவடக்கு கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றியவர்.கல்வி வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்த பெருமகன்
மட்டக்களப்பு குருமண்வெளியில் பிறந்து, இலங்கையின் மாண்புமிகு கல்வியாளராக உயர்ந்தவர் கலாநிதி ஈ.ஜே. சற்குணராஜா அவர்கள்.
தமது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கல்வி வளர்ச்சிக்காகவே அர்ப்பணித்தவர். குறிப்பாக, வடக்கு–கிழக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாட்டைத் தனது முக்கிய இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டவர். மாணவர்கள், குறிப்பாக விஞ்ஞானக் கல்வித் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும் அர்ப்பணிப்பும் கொண்டிருந்த பெருமகனாவார்.
மிகச் சிறந்த பெளதீக ஆசிரியர் மட்டக்களப்பில் பல கல்வியாளர்களை உருவாக்கியவர்.
வடக்கு–கிழக்கு மாகாணத்தில் ஆரம்பக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வித் துறைகளின் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். கல்வி நிர்வாகம், திட்டமிடல், ஆசிரியர் மேம்பாடு, கல்விச் செயற்பாடுகளின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு போன்ற பல்வேறு துறைகளில் தமது ஆளுமையையும் அனுபவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் வடக்கு–கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளராகப் பணியாற்றிய இவர், சர்வதேச அபிவிருத்தித் திட்டங்களுடனும் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, ஜேர்மனியின் GTZ நிறுவனத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அடிப்படைக் கல்வி ஆதரவுத் திட்டம் (Basic Education Support Programme – BESP), ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம் (Teacher Improvement Project) ஆகியவற்றின் செயற்பாடுகளில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளர், ஆலோசகர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றி முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
வடக்கு–கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய நீண்டகாலச் சேவையையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி, கிழக்குப் பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி மதிப்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments: