News Just In

11/04/2026 03:22:00 PM

கிழக்கு மாகாணத்தின் சிவில் சமூக அமைப்புகள் காத்தான்குடியில் ஒன்றுகூடி பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூம் ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறுவதற்கான அவசரக் கோரிக்கை

கிழக்கு மாகாணத்தின் சிவில் சமூக அமைப்புகள் காத்தான்குடியில் ஒன்றுகூடி பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூம் ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறுவதற்கான அவசரக் கோரிக்கை




(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கிழக்கு மாகாணத்தின் சிவில் சமூக அமைப்புக்கள் காத்தான்குடியில் ஒன்றுகூடி பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறுவதற்கான அவசரக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புக்களும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த செயற்பாட்டுக் கூட்டத்தில் கொழும்பு பல்கலைக் கழக மனித உரிமைகள் நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் சட்டத்தரணியும் சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஏ.எம். ஹக்கீம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஆர்வலர் சுவஸ்திகா அருள்லிங்கம் மற்றும் வழக்கறிஞர் எம்.எம். பஹீஜ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கினார்.

நிகழ்வின் இறுதியில் மேற்படி சட்ட மூலங்களை உடனடியாக மீளப் பெறுவதற்கான அவசரக் கோரிக்கை அடங்கிய கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

விரிவான அந்த அறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு உள்ளது

இன, மத, மொழி அல்லது அரசியல் அடிப்படைகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து இலங்கையர்களினதும் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களைப் பாதுகாக்கும் நோக்கில், கிழக்கு மாகாணத்தைச் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கீழே கையொப்பமிடும் சிவில் சமூக அமைப்புகளும் மனித உரிமைப் பாதுகாவலர்களுமாகிய நாம் இந்தக் கூட்டு அறிக்கையை வெளியிடுகின்றோம். முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றோம்.

முதற்கட்டமாக, சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துதல், ஊழலை ஒழித்தல், போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல், நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை மீள நிலைநாட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் நேர்மறையான முயற்சிகளை நாம் வரவேற்றுப் பாராட்டுகின்றோம். குறிப்பாக, தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்திட்டம், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டம் (Proceeds of Crime Act) மற்றும் சுயாதீனமான வழக்குத் தொடரும் கட்டமைப்புகளை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றை நாம் பாராட்டுகின்றோம். அதேபோன்று, தேசிய ஒற்றுமையை மேம்படுத்துதல், சமூகங்களுக்கிடையிலான இனவாதப் பகைமையைக் குறைத்தல் மற்றும் வரலாற்று ரீதியாகப் பாகுபாடு, அச்சுறுத்தல் மற்றும் இனவாத வன்முறைகளை எதிர்கொண்ட சமூகங்கள் உட்பட அனைத்துச் சமூகங்களுக்கும் பாதுகாப்பானதும் உள்ளடக்கமானதுமான சூழலை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளும் ஊக்கமளிப்பவையாக உள்ளன.

எனினும், தற்போது அரசினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலங்கள் மேற்குறிப்பிட்ட நேர்மறையான சாதனைகளைப் பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. இவை பயங்கரவாதத் தடைச் சட்டத்துடன் (PTA) தொடர்புடைய அடக்குமுறை அதிகாரங்களைத் தொடர்ந்து பேணுவதுடன், பல்வேறு அம்சங்களில் அவற்றை மேலும் விரிவுபடுத்துவதாகவும் காணப்படுகின்றன. நீண்டகாலத் தடுப்புக் காவல், அளவுக்கு மீறிய நிறைவேற்று அதிகாரம் மற்றும் போதிய நீதித்துறை மேற்பார்வையின்மை ஆகியவை வரலாற்று ரீதியாக இலங்கை முழுவதும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குப் பெரும் துன்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

முன்மொழியப்பட்ட மேற்படி இரண்டு சட்டமூலங்களிலும் தெளிவற்றதும் பரந்துபட்டதுமான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இவை அமைதியான போராட்டங்கள், அரசியல் கருத்து வேறுபாடுகள், தொழிற்சங்க நடவடிக்கைகள், சமூக நீதி, காணி உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மத சுதந்திரம் தொடர்பான நியாயமான பிரசாரங்களைச் சட்டவிரோதமானவையாகக் கருதுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. இத்தகைய அச்சுறுத்தல்கள் எந்தவொரு குறிப்பிட்ட இன அல்லது மத சமூகத்திற்கு மட்டும் உரியவை அல்ல. மாறாக, இலங்கையின் ஒவ்வொரு குடிமகனினதும் ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் தொடர்பானவையாகும். இவ்வாறான அதிகாரங்கள் சாதாரண பொதுமக்கள், இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் தன்னிச்சையான கைதுகள், அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கக்கூடும்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலமானது, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதற்கு முன்னரும் வழக்கு விசாரணைக்கு முன்னரும் நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைப்பது, பொலிஸாருக்கு தகவல்களை வலுக்கட்டாயமாக வெளிப்படுத்தச் செய்வது மற்றும் வற்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகம் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களைச் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் ஆகியவை தொடர்பில் கடுமையான கவலைகளை எழுப்புகின்றது. ,த்தகைய ஏற்பாடுகள் சித்திரவதை மற்றும் தன்னிச்சையான தடுப்புக் காவலுக்கு எதிரான அடிப்படைப் பாதுகாப்பு உத்தரவாதங்களை சவாலுக்குட்படுத்துகின்றன.

அதேபோன்று, PSTA சட்டமூலத்தின் கீழ், பிரசுரங்கள், வெளியீடுகள், டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் மீது விதிக்கப்படக்கூடிய கட்டுப்பாடுகள் கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமை, சுயாதீன ஊடகத்துறை மற்றும் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவுகூரும் உரிமை உட்பட நியாயமான சிவில் நடவடிக்கைகளை அச்சுறுத்துகின்றன.

உள்நாட்டில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு அப்பால், இந்தச் சட்டமூலங்கள் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் கடப்பாடுகளையும், குறிப்பாக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையையும் (ICCPR) மீறக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. அத்துடன், சர்வதேச சமூகத்திலும் இலங்கையின் நற்பெயரையும் அந்தஸ்தையும் பாதிக்கக்கூடும். இத்தகைய முன்னேற்றங்கள் ஜனநாயக ஆட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் இலங்கைக்கு உள்ள உறுதிப்பாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கையைப் பலவீனப்படுத்துவதுடன், நாட்டின் சர்வதேச உறவுகள், பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மையையும் பாதிக்கக்கூடும்.

எனவே,

முன்மொழியப்பட்டுள்ள PSTA மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறுதல் வேண்டும்.

அடிப்படைச் சுதந்திரங்களை ஒடுக்கும், அச்சத்தை உருவாக்கும் அல்லது பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் சட்டங்களின் அடிப்படையில் உண்மையான தேசியப் பாதுகாப்பையும், ஜனநாயக ஆட்சியையும், நிலையான நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியாது.

எனவே, ஒவ்வொரு இலங்கையரினதும் அரசியலமைப்பு உரிமைகளையும் ஜனநாயகச் சுதந்திரங்களையும் பாதுகாக்கவும் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் முன்வர வேண்டும் என நாம் பொறுப்புடன் வலியுறுத்துகின்றோம்.

No comments: