
Houthis Shot Down Saudi F-15 Air Craft: சவுதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஹவுதி படையினர் வெளியிட்டுள்ளனர்.
ஏமனில் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் கூட்டுப் படையில் உள்ள போர் விமானம் ஒன்றை மாரிப் மாகாணத்தின் வான்வெளியில் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாக ஹவுதிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்த தகவலில், ஹவுதி படையினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட சவுதி அரேபியாவின் F-15 ரக போர் விமானம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை மூலம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 4 நிமிட காட்சிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஹவுதிகள் இலக்கை நிர்ணயம் செய்தது முதல் போர் விமானம் சிதைந்து புகைமூட்டத்துடன் எரியும் சிதைவுகள் வரை பார்க்க முடிகிறது.
பகல் நேரத்தில் வெளியான வீடியோவில், பாறைகள் நிறைந்த பாலைவனப் பகுதியில் போர் விமானம் ஒன்றின் சிதைந்த உதிரி பாகங்கள் மற்றும் சவுதியின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட சிதைந்த பெரிய வால் பகுதி ஆகியவை கிடப்பது பதிவாகியுள்ளது.
இந்த சண்டைக்கு மத்தியில், இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீது ஹவுதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக சவுதி கூட்டணி அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளது.
சவுதியின் இந்த குற்றச்சாட்டுகள் புனையப்பட்டது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.
No comments: