நூருல் ஹுதா உமர்
உஹன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அபார வெற்றியைப் பதிவு செய்த சாய்ந்தமருது பிரைவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம், சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் வரலாற்றில் முதல்முறையாக 2ஆம் பிரிவுக்கு (Division 2) தகுதி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் சாய்ந்தமருது பிரைவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகமும், DS சேனாநாயக்க விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற DS சேனாநாயக்க விளையாட்டுக்கழகம் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பிரைவ் லீடர்ஸ் அணி, எதிரணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் DS சேனாநாயக்க அணிக்கு 208 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
208 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய DS சேனாநாயக்க விளையாட்டுக்கழக அணி, பிரைவ் லீடர்ஸ் அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 43 ஓவர்களில் 160 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் பிரைவ் லீடர்ஸ் அணி இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று தொடரின் சாம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது.
தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரைவ்லீடர்ஸ் அணி, இறுதிப் போட்டியிலும் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என மூன்று துறைகளிலும் ஒருங்கிணைந்த திறமையை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியது.
இந்த வெற்றியானது சாய்ந்தமருது பிரைவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. இதன் மூலம் அணி அதிகாரப்பூர்வமாக Division 2 போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளது.
சாய்ந்தமருது மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ள பிரைவ் லீடர்ஸ் அணியின் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அணியின் வெற்றிக்காகப் பங்களித்த அனைவருக்கும் விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பிரதேச மக்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

No comments: