- சமூக ஆய்வாளர் கலாநிதி றவூப் ஸெய்ன்
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
“இந்த நாட்டில் எங்களோடு வாழ்கின்ற சிங்கள தமிழ் சமூகங்களைப் பற்றிய எங்களது பார்வை தெளிவாக இருக்க வேண்டும். அந்த மக்களைப் பற்றி நாங்கள் அந்நிய ஜாதி மக்கள் என்பதையும் அவர்கள் காபிர்கள் பிறர் என்பதையும் நாங்கள் தவிர்க்க வேண்டும். அவர்கள் சக மனிதர்கள்” என சமூக அறிஞரும் பாதிஹ் உயர்கல்விக்கான நிறுவகத்தின சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆய்வாளருமான கலாநிதி றவூப் ஸெய்ன் தெரிவித்தார்.
“சமூக நிறுவனங்களின் மூலோபாய இலக்குகளும் வகிபாகங்களும் இணைந்து செயல்படுவோம், சமூகப் பார்வையை மாற்றுவோம், ஆக்கபூர்வமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் அவர் வளவாளராகக் கலந்து கொண்டு தெளிவூட்டினார்.
தொழில் வாண்மையாளர், சிவில் அமைப்புகளின் ஒன்றிய செயற்பாட்டாளரும் சமூக சேவையாளருமான யூ.எல்.எம்.என். முபீன் தலைமையில் நிகழ்வு காத்தான்குடியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி றவூப் ஸெய்ன்,
முஸ்லிம்கள் எங்கே வாழ்ந்தாலும் அவர்கள் வாழ்கின்ற நாட்டைக் கட்டியெழுப்பி வளப்படுத்த வேண்டும் என்று இஸ்லாம் பணிக்கிறது.
இந்த விடயத்திலே அல்குர்அன் எங்களுக்குத் தெளிவாக வழிகாட்டுகிறது.
அந்நிய மக்கள் என்று அடுத்த சமூகத்தாரை அழைப்பதை விட அவர்களை சக மனிதர்களாக அழைப்பதையே இஸ்லாம் வழிகாட்டுகிறது.
நாம் நம்மோடு வாழ்கின்ற சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் இன்னும் வேறு சமூகத்தாரையும் அந்நியப்படுத்தி வாழுமாறு இஸ்லாம் எங்களுக்கு வழி காட்டவில்லை.
இப்பொழுது 21ஆம் நூற்றாண்டில்தான் எல்லோரையும் உள்ளடக்க வேண்டும் என்று மனித உரிமை சாசனங்கள் பிரகடனப்படுத்தும் விடயத்தை இஸ்லாம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே பேதங்களின்றி எல்லா மனிதர்களையும் உள்ளடக்குமாறு கட்டளையிட்டு விட்டது.
இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள, தமிழ் மக்கள் எங்களுடைய எதிரிகளல்ல, அதேபோல நாங்கள் அவர்களுடைய எதிரிகளுமல்ல.
மனிதர்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கிடையில் முரண்பாடுகள் எழுகின்றபோது அவற்றைத் தீர்ப்பதற்கு இஸ்லாத்திலே அழகிய வழிமுறைகள் இருக்கின்றன.
எங்களுக்கு, எங்களோடு வாழ்கின்ற சக மனிதர்களைப் பற்றிய பார்வையில் கோணல் ஏற்பட்டு விடக் கூடாது. அவ்வாறு கோணல் ஏற்பட்டதன் காரணமாகவே நாம் தற்காலம் வரையில் நமது நாட்டில் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
அமைதியாக அந்நியோன்யமாக வாழ வேண்டிய இந்த நாட்டை கொந்தளிப்புள்ள ஒரு நாடாக ஆக்க வேண்டிய தேவை இல்லை.
எனவே சமூக நிறுவனங்கள் இந்த விடயத்தில் அதிக அக்கறையும் முன்னுரிமையும் அளித்து இன மத வேறுபாடுகளையும், அந்நியப்படுத்தலையும் தவிர்த்து இந்த நாட்டில் அமைதிiயும், சகவாழ்வையும், சமாதானத்தையும் உருவாக்குவதற்கு அரும்பாடு பட வேண்டும்.
மற்ற சமூகத்தார் அந்நியர்கள் அல்ல, பிறர் அல்ல, காபிர்கள் அல்ல அவர்கள் சக சமூகத்தார் என்பதை அறைகூவல் செய்ய வேண்டும். இதுதான் முஸ்லிம் நிறுவனங்களின் முழுமுதற் கடமை” என்றார்.
No comments: