நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) ஒத்துழைப்புடன், வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தினால் அம்பாறை மாவட்டத்தில் பல்லின மக்களிடையே சமூக சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில், கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கமு/கமு/அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்கான சமூக நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். பைசல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஜனாப் ஏ.சி.ஏ. அசிஸ் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கம், மொழி உரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவம் ஆகிய விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விரிவான விளக்கங்களை வழங்கினார். மேலும், சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்புவதில் மாணவர்களின் பங்களிப்பு, பொறுப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இதன்போது, செயற்றிட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி ஜனாபா எம். றிலீபா பேகம் அவர்களும், திட்ட இணைப்பாளர் ஜனாப் எம்.ஐ. றியால் அவர்களும் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
இக்கருத்தரங்கில் அப் பாடசாலை ஆசிரியரான எம்.வை.எம்.யூசுப் இம்ரான் அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களை ஒழுங்குபடுத்தி தந்தார், அத்துடன் மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் மாணவர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, மொழி உரிமைகளுக்கான மதிப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் அமைதியான மற்றும் நல்லிணக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கான பங்களிப்பை வழங்கும் நோக்கம் கொண்டுள்ளது.
No comments: