News Just In

9/02/2026 06:35:00 PM

மக்களின் பிரச்சினைகள் கூட்டங்களில் மட்டுமல்ல, நடைமுறையில் தீர்க்கப்பட வேண்டும்.நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்

மக்களின் பிரச்சினைகள் கூட்டங்களில்மட்டுமல்ல, நடைமுறையில் தீர்க்கப்பட வேண்டும்.நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்கள் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தல்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (02.09.2026) பிரதேச செயலாளர் உதயசிறிதர் அவர்களின் ஒருங்கிணைப்பில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேசத்தின் கல்வி, சுகாதாரம், விளையாட்டு, குடிநீர், மின்சாரம், வீதி அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்து, பேருந்து சேவைகள், காணி விவகாரங்கள் உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக பெரியகல்லாறு மற்றும் கோட்டைக்கல்லாறு பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது, தொடர்ச்சியான அரசியல் தலையீடுகளே இதுவரை மைதான அபிவிருத்தியில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் ஏற்படாததற்கான முக்கிய காரணமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார்.

விளையாட்டு மைதானங்கள் இளைஞர்களின் உடல் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியமானவை என்பதுடன், அவற்றை உரிய முறையில் அபிவிருத்தி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இதனையடுத்து, எதிர்வரும் வாரத்தில் பிரதேச சபையும் Clean Sri Lanka திட்டத்துடன் இணைந்து குறித்த மைதானத்தை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. கடலில் தொழிலில் ஈடுபடும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தேவையான இடங்களில் Beacon Light பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார். இதற்காக தேவையான இடங்களை அடையாளம் கண்டு, Beacon Light பொருத்துவதற்கான கோரிக்கையை கடற்றொழில் அமைச்சிடம் முன்வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

களுதாவளை பகுதியில் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் குறைந்த மின்னழுத்தப் பிரச்சினையும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதன்போது, குறித்த பகுதியில் நிலவும் மின்னழுத்தப் பிரச்சினையை உடனடியாக பரிசோதித்து, அதன் காரணத்தை கண்டறிந்து மக்களுக்கு உரிய தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.

பெரியகல்லாறு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அப்பகுதியில் நீர்க்குழாய் பொருத்தும் பணிகளை முன்னெடுப்பதில் கல்முனை மாநகர சபையினால் தடைகள் ஏற்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதன்போது, பெரியகல்லாறு மக்களின் குடிநீர் தேவையை கருத்திற்கொண்டு, குறித்த நீர்க்குழாய் பொருத்தும் பணிகளை தாமதமின்றி முன்னெடுப்பதற்கு தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் நிலவும் திண்மக்கழிவு அகற்றல் பிரச்சினை தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. வைத்தியசாலை வளாகத்தில் திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுவதில் காணப்படும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, வைத்தியசாலை நிர்வாகம், பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து செயற்பட்டு, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் திண்மக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. குறித்த யோசனையை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், பிரதேசத்தின் கல்வித்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள், சுகாதார சேவைகளின் மேம்பாடு, வீதி அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்து மற்றும் பேருந்து சேவைகளில் காணப்படும் குறைபாடுகள், காணி விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களும் கூட்டத்தில் ஆராயப்பட்டன.

மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பதிவு செய்வதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கம் என சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். மக்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு, அதற்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளுக்கு துறைசார் அதிகாரிகள், பிரதேச சபை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து செயற்படுவதன் மூலம் நிலையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மே. வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

No comments: