News Just In

9/02/2026 06:59:00 AM

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கைசார் முன்மொழிவுகள் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிப்பு!

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கைசார் முன்மொழிவுகள் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிப்பு!

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (29) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது. ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக நடத்தப்பட்டதுடன், இது அதன் இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்தது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்காகக் கொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, சட்டத்தரணி சுசந்த தொடவத்த, லால் பிரேம்நாத், சுனில் ராஜபக்ஷ, எம்.கே.எம். அஸ்லம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அபுபக்கர் அதம்பாவா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, முஹம்மது பைசல், ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு, இளைஞர் சமூகம், கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பிரச்சினைகள், தொடக்கக் கல்வி ஒழுங்குமுறை, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்துதல், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையங்களை நிறுவுதல், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தல் மற்றும் தகவல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், அத்துடன் உகந்த விளையாட்டு அரங்க வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களது யோசனைகளையும் ஆலோசனைகளையும் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.

குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.

No comments: