
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு - மாதவனை பகுதியில், பட்டியில் கட்டப்பட்டிருந்த வெள்ளைப் பசு ஒன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்துள்ளது.
19.10.2026 அன்று இரவு இடம்பெற்ற சம்பவத்தில் அருணாசலம் செல்வரெட்ணம் என்பவருக்குச் சொந்தமான பசுவே காயமடைந்தது.
இச்சம்பவம் தொடர்பாக, 20.10.2026 அன்று காலை 7.00 மணியளவில் மயிலத்தமடு–மாதவனை காவல்துறை காவலரணில் கடமையிலிருந்த காவல்துறையினருக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த நிலையில், அச்சமயம் பொறுப்பதிகாரி உறங்கிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், காலை 9.40 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முதலில் வயல்வெளிகளில் உள்ள கால்நடைகளை காட்டிற்குள் அப்புறப்படுத்துமாறு பண்ணையாளர்களை வற்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்த பசுவைப் பார்வையிட்ட காவல்துறையினர், அது கட்டுத்துவக்கினால் சுடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இரவு வேளைகளில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாகவும், இதனால் தமது உயிருக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் வாழ்வதாகவும் அப்பகுதி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: