News Just In

10/14/2026 06:36:00 AM

ஷிரந்தி ராஜபக்ச வழக்கில் திருப்பம்! வாக்குமூலம் வழங்கியுள்ள இரு வைத்தியர்கள்

ஷிரந்தி ராஜபக்ச வழக்கில்  திருப்பம்! வாக்குமூலம் வழங்கியுள்ள இரு வைத்தியர்கள்




லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்காக ஸ்கேனர் இயந்திரம் வாங்குவதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிடம் பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாயில் நிதி முறைகேடு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் புதிய தகவல்களைச் சமர்ப்பித்துள்ளது.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட ஸ்கேனர் இயந்திரம் உண்மையில் சீன அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகும்.

எனினும், சீனாவினால் வழங்கப்பட்ட அந்த இயந்திரத்தை 'சிரிலிய சவிய' அமைப்பின் ஊடாக நன்கொடையாக வழங்கப்பட்டது போல் காட்டி, ஷிரந்தி ராஜபக்ச தனது மகனின் பிறந்தநாளன்று வைத்தியசாலைக்கு வழங்கியதாகப் பிரதி மன்றாடியார் நாயகம் நீதிமன்றத்தில் இன்று(13)தெரிவித்துள்ளார்.

'கார்ல்டன் சுவ உதான' திட்டத்திற்காகக் கோரப்பட்ட 10 மில்லியன் ரூபாய், அதற்கான கணக்கில் வைப்புச் செய்யப்படாமல், மருதானை சுதுவெல்ல பகுதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக் கிளையிலுள்ள 'சிரிலிய சவிய' கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 'சிரிலிய சவிய' ஒரு தனியார் அரச சார்பற்ற அமைப்பாக இருந்தபோதிலும், நிதியுதவி கோரும் கடிதங்களில் அரச முத்திரை, ஜனாதிபதி செயலகத்தின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி அரச நிறுவனங்கள் மீது செல்வாக்குச் செலுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணியாற்றிய இரு வைத்தியர்கள், 'சிரிலிய சவிய' அமைப்பிடம் தாங்கள் அத்தகைய ஸ்கேனர் இயந்திரத்தைக் கோரவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து, கொழும்பு முதன்மை நீதவான் அசங்க எஸ். போதரகம, விசாரணைகளைத் தொடர்ந்து ஷிரந்தி ராஜபக்சவை ஒக்டோபர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

No comments: