மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் "திடமான உள்ளங்கள் வளமான சிறுவர்கள்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற உலக சிறுவர் தின நிகழ்வில் “அமைதி தேடும் சிறு உள்ளங்கள் - மன அழுத்தமும் அதன் பாதிப்பும்" எனும் ஆய்வுநூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளிச் சிறார்களின் சிறந்த ஆக்கத்திறன் நிகழ்வுகள், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களைச் சேர்ந்த சிறுவர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள், பிரதேச சிறுவர் சபைச் சிறார்களின் ஆற்றல் வெளிப்பாடுகள் என்பன இடம்பெற்றன.
மேலும், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் 30 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்படன. நிகழ்வின் கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டு அவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச விளையாட்டு அதிகாரி சங்கீதா கண்ணதாசன், வாழைச்சேனை, கல்குடா சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச சிறுவர் சபையினர், ஆசிரியர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments: