News Just In

10/18/2026 06:53:00 AM

மட்டக்களப்பில் மாவட்ட செயலகத்தை அணுகும் வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் மாநகர சபையால் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் மாவட்ட செயலகத்தை அணுகும் வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் மாநகர சபையால் முன்னெடுப்பு



(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை அணுகும் வீதிகளைப் புனரமைக்கும் பணிகளில் மட்டக்களப்பு மாநகர சபை ஈடுபட்டுள்ளதாக மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.

பயணிகளின் நலனையும், அத்தியாவசியப் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளையும், வீதி விபத்துக்களைத் தடுப்பதை நோக்காகக் கொண்டும் மட்டக்களப்பு மாநகர சபையினால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மாநகர முதல்வர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - திராய்மடு, சுவிஸ்கிராமம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் சேதமடைந்து, குன்றும் குழியுமாகக் காணப்பட்டதுடன், பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்துவதிலும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

மாவட்ட செயலகத்திற்கு தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வருகை தரும் பொதுமக்களும் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களும் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டும், மாவட்ட செயலகத்தை அணுகும் வீதிகளைத் திருத்தியமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

வீதிகளின் புனரமைப்புப் பணிகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார் உட்பட ஏனைய வட்டாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர்களும் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

No comments: