News Just In

9/27/2026 02:46:00 PM

பத்தேகம துப்பாக்கிச் சூடு : உயிரிழப்பு 2 ஆக அதிகரிப்பு

பத்தேகம துப்பாக்கிச் சூடு : உயிரிழப்பு 2 ஆக அதிகரிப்பு



காலி, பத்தேகம - ஹல்பதோட பகுதியில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியை இலக்கு வைத்து இந்த கொடூரத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இன்றையதினம் காலை ஹல்பதோட பகுதியில் முச்சக்கர வண்டியொன்று பயணித்துக்கொண்டிருந்த போது, காரில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத குழுவினர், அதனை மறைத்துச் சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் பயணித்து படுகாயமடைந்த இரு பெண்களுள் ஒருவர், பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் தீவிர சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றைய பெண் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவரின் அடையாளங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகப் பத்தேகம பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.

No comments: